ரஷ்யாவில் குண்டுவெடிப்பு: போலீஸ் அதிகாரி உள்ளிட்ட 3 பேர் பலி

மாஸ்கோ:ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் போலீஸ் அதிகாரி இருவர் உள்ளிட்ட 3 பேர் கொல்லப்பட்டனர்.
ரஷ்யாவின் மாஸ்கோ தெற்குப்பகுதியில் யெலெட்ஸ்கயா என்ற தெருவில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரிடம், அவ்வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

விசாரணையின் போது திடீரென் பலத்த சத்தத்துடன் குண்டுவெடித்தது. வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில் இரண்டு போலீஸ் அதிகாரிகளும் பலத்த காயமடைந்து பின்னர் உயிரிழந்தனர். அங்கிருந்த ஒருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
போலீஸ் அதிகாரிகளைக் கொலை செய்ய முயன்றது மற்றும் சட்டவிரோத வெடிபொருட்கள் கடத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் ரஷ்யாவின் புலனாய்வுக் குழு வழக்குப் பதிவு செய்துள்ளது.
இச்சம்பவம் நடந்த இடத்திற்கு மிக அருகில், கடந்த டிசம்பர் 22 அன்று ரஷ்ய ராணுவத்தின் மூத்த தளபதி லெப்டினன்ட் ஜெனரல் பனில் சர்வாரோவ் கார் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார். இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையே தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement