ரூ.14 கோடிக்கு சொத்துகள் குவித்த கர்நாடக அமைச்சரின் தனி செயலர்

1

பெங்களூரு: கர்நாடக அரசின் வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜமீர் அகமது கானின் தனி செயலர், 14.38 கோடி ரூபாய்க்கு சொத்துகள் வாங்கி குவித்திருப்பதாக, லோக் ஆயுக்தா தெரிவித்துள்ளது.


கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது. அக்கட்சியைச் சேர்ந்த ஜமீர் அகமது கான், வீட்டு வசதித் துறை அமைச்சராக உள்ளார். இவரது தனி செயலர் சர்தார் சர்ப்ராஸ் கான்.

இவர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக, பெங்களூரு நகர லோக் ஆயுக்தா எஸ்.பி., சிவபிரசாத்துக்கு புகார்கள் சென்றன.

இதையடுத்து, நேற்று காலை 6:00 மணிக்கு பெங்களூரு ஹலசூரு ஏரிக்கரை அருகே உள்ள, சர்தார் சர்ப்ராஸ் கான் வீட்டிற்கு, எஸ்.பி., சிவபிரசாத் தலைமையில், 30க்கும் மேற்பட்ட லோக் ஆயுக்தா போலீசார் சென்று, சோதனையில் ஈடுபட்டனர்.

ஹலசூரு வீடு மட்டுமின்றி, பெங்களூரில் உள்ள மேலும் ஆறு வீடுகள், குடகில் உள்ள இர ண்டு காபி தோட்ட அலுவலகங்கள், மைசூரின் எச்.டி., கோட்டில் உள்ள பண்ணை வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.



இது குறித்து, லோக் ஆயுக்தா வெளியிட்ட அறிக்கை: வீட்டு வசதி மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரின் தனி செயலருக்கு சொந்தமான, 13 இடங்களில் சோதனை நடத்தப்பட்டன.

இதில், நான்கு வீடுகள், 37 ஏக்கர் விவசாய நிலம் என, 8.44 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்கள், 1.64 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள், 1.29 கோடி ரூபாய் மதிப்பிலான வாகனங்கள், 5.93 கோடி ரூபாய் ரொக்கம் உட்பட 14.38 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை சட்டவிரோதமாக சேர்த்தது கண்டறியப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அமைச்சர் ஜமீர் அகமது கான் கூறுகையில், ''சர்தார் சர்ப்ராஸ் கான் பெரிய பணக்காரர். அவரது தந்தை நிறைய சொத்துகளை விட்டு சென்றுள்ளார். அரசு பணியில் சேர்ந்து தான், சொத்து சேர்க்க வேண்டும் என்ற அவசியம் அவருக்கு இல்லை.

''மக்களுக்கு சேவை செய்ய ஆசைப்பட்டதால், எனது தனி செயலராக நியமித்தேன். அவரது வீடுகளில் எந்த அடிப்படையில், லோக் ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தினர் என்று தெரியவில்லை,'' என்றார்.

Advertisement