பெண் கலைஞரிடம் அத்துமீறல்; மலையாள இயக்குநர் கைது

1

திருவனந்தபுரம்: கேரளாவில் பெண் சினிமா கலைஞரை பலாத்காரம் செய்ய முயன்ற மலையாள இயக்குநர் குஞ்சு முகமது கைது செய்யப்பட்டார்.


கேரளாவில் மாநில அரசால் நடத்தப்படும் சர்வதேச திரைப்பட விழா சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில், சிறந்த படங்களை தேர்வு செய்யும் குழுவின் தலைவராக பிரபல மலையாள இயக்குநர் குஞ்சு முகமது நியமிக்கப்பட்டிருந்தார். இந்தக் குழுவில், பெண் சினிமா கலைஞர் ஒருவரும் உறுப்பினராக இருந்தார்.


திரைப்பட விழாவில் திரையிடப்பட வேண்டிய சினிமாக்களை தேர்வு செய்வது தொடர்பான கூட்டம், திருவனந்தபுரத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடந்தது.

அப்போது, பெண் சினிமா கலைஞர் தங்கியிருந்த அறைக்கு சென்ற குஞ்சு முகமது, அவரிடம் தவறாக நடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இது குறித்து முதல்வர் பினராயி விஜயனிடம் பெண் கலைஞர் புகார் செய்தார்.

இதையடுத்து, பலாத்காரம் உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த போலீசார், குஞ்சு முகமதுவை கைது செய்தனர். ஏற்கனவே, முன்ஜாமின் பெற்றிருந்ததால், அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

Advertisement