7 வீடுகளில் திருட்டு கிராமத்தினர் கலக்கம்

ஹாவேரி: நாகேந்திரனமட்டி கிராமத்தில், அடுத்தடுத்து இருந்த ஏழு வீடுகளில் திருட்டு நடந்துள்ளது. ஒரு வீட்டில் மர்மநபர்கள் டீ தயாரித்து குடித்துவிட்டு திருடியுள்ளனர்.

ஹவேரி நகரின், நாகேந்திரமட்டி கிராமத்தில் வார்டு எண் 5ல், பல குடியிருப்புகள் உள்ளன. பலரும் பணி நிமித்தமாக, வெளியூர் சென்றுள்ளதால், ஏழெட்டு வீடுகள் பூட்டப்பட்டிருந்தன. இதை நோட்டம் விட்ட மர்ம நபர்கள், நேற்று முன்தினம் நள்ளிரவு, பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர். தங்க நகைகள், ரொக்கப்பணத்தை திருடினர்.

வரிசையாக இருந்த ஏழு வீடுகளில், திருட்டு நடந்தது. ஒரு வீட்டில் புகுந்த நபர்கள், அங்கு அடுப்பை பற்ற வைத்து, டீ தயாரித்து குடித்து விட்டு, பணம், தங்க நகைகளை திருடிக்கொண்டு தப்பியோடினர். வீட்டு உரிமையாளர்கள், வீட்டுக்கு திரும்பிய போது, திருட்டு நடந்தது தெரிந்தது. ஒவ்வொரு வீட்டிலும் லட்சக்கணக்கான ரூபாய் ரொக்கம், தங்க நகைகளும் திருடு போயுள்ளன. தற்போது மூன்று வீடுகளின் உரிமையாளர்கள், ஹாவேரி ஊரக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

போலீசாரும் வழக்கு பதிவு செய்து, விசாரணையை துவக்கியுள்ளனர். திருட்டு நடந்த வீடுகளை நேரில் பார்வையிட்டனர். மற்ற வீட்டினரும் புகார் அளித்தால், சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என, போலீசார் கூறியுள்ளனர்.

Advertisement