கோவையில் தாயை பிரிந்த கருஞ்சிறுத்தைக்குட்டி உயிரிழந்த சோகம்

1

கோவை: கோவை மருதமலை அடிவாரத்தில் தாயைப் பிரிந்த கருஞ்சிறுத்தை குட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



மருதமலை அடிவாரத்தில் உள்ள லெப்ரஸி காலனியில் நேற்று கருஞ்சிறுத்தை ஒன்று தனது குட்டியுடன் சுற்றித் திரிந்துள்ளது. பிறகு, குட்டியை அங்கு யாரும் இல்லாத வீட்டின் அருகே விட்டுவிட்டு, தாய் சிறுத்தை மாயமாகியது. குட்டி சிறுத்தையின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.


அதன்பேரில் அங்கு சென்று குட்டியை மீட்ட வனத்துறையினர், மீண்டும் அதனை தாய் சிறுத்தையுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்காக, அதே வனப்பகுதியில் உள்ள பாதுகாப்பான இடத்தில் குட்டியை விட்டுவிட்டு சென்று விட்டனர்.


இந்த நிலையில், இன்று அதிகாலை மீண்டும் அந்த இடத்திற்கு வனத்துறையினர் சென்று பார்த்துள்ளனர். அங்கு குட்டி இல்லாத நிலையில், சந்தேகத்திற்கு அக்கம் பக்கத்தில் தேடி பார்த்துள்ளனர். அப்போது, சுமார் 300 மீட்டர் தொலைவில் சிறுத்தை குட்டி உயிரிழந்த நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.


பின்னர், இது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்று சிறுத்தை குட்டிக்கு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு, இறப்புக்கான காரணத்தை கண்டறிய உள்ளனர்.


மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கருஞ்சிறுத்தைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகக் காணப்படுகின்றன. இந்த சூழலில், தாயை பிரிந்த கருஞ்சிறுத்தை குட்டி உயிரிழந்தது வனவிலங்கு ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement