வருத்தம் மட்டும் போதாது; நடவடிக்கை தேவை: வங்கதேச அரசுக்கு சசி தரூர் அறிவுறுத்தல்

2


புதுடில்லி: ''வருத்தம் தெரிவிக்கும் அறிக்கைகள் மட்டும் போதாது. வன்முறையை கட்டுப்படுத்த கூடுதல் நடவடிக்கை தேவை,'' என வங்கதேச இடைக்கால அரசுக்கு காங்கிரஸ் எம்பி சசி தரூர் வலியுறுத்தி உள்ளார்.


வங்கதேசத்தில் ஹிந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவில் நடைபெறும் போராட்டத்திற்கு காங்கிரஸ் எம்பி சசி தரூர் ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து சசி தரூர் கூறியதாவது:

வங்கதேசத்தில் ஹிந்து இளைஞர் கொல்லப்பட்டது கொடூரமான சம்பவம். நடந்திருக்கக்கூடாத ஒன்று. இத்தகைய சம்பவங்களுக்கு வெறும் வருத்தம் தெரிவிக்கும் அறிக்கைகள் மட்டும் போதாது.

வன்முறையை கட்டுப்படுத்த கூடுதல் நடவடிக்கை தேவை. தெருக்களில் வன்முறையை கட்டுப்படுத்துவது வங்கதேச அரசின் கடமை. அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் இந்த வன்முறையைக் கட்டுப்படுத்த வேண்டும். தெருக்கள் மீண்டும் அமைதியாக இருப்பதையும், மக்கள் மீண்டும் பாதுகாப்பாக உணரப்படுவதையும் அவர்கள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு சசி தரூர் கூறியுள்ளார்.

ஆதரவு



பதவி நீக்கம் செய்யப்பட்ட வங்கதேசப் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை இந்தியாவில் தங்க அனுமதித்த மத்திய அரசின் முடிவை சசி தரூர் ஆதரித்தார். இது குறித்து சசி தரூர் கூறுகையில், பல ஆண்டுகளாக நாட்டின் நல்ல நண்பராக இருந்த ஒருவரை வெளியேற்றாமல் இருக்க இந்தியா சரியான மனிதாபிமான உணர்வோடு செயல்பட்டது,. பிரச்னைகள் அனைத்தும் முடிவுக்கு வரும் வரை ஷேக் ஹசீனா இந்தியாவில் பாதுகாப்பாக இருக்க அனுமதிக்கப்பட வேண்டும், என்றார்.

Advertisement