தேயிலை விவசாயிகளுக்கு மானியம் வேண்டும் மலை மாவட்ட விவசாயிகள் சங்கம் கோரிக்கை

கோத்திகிரி: 'தேயிலை விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு, 10 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்க வேண்டும்,' என, விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மலை மாவட்ட சிறு விவசாயிகள் நல சங்கத் தலைவர் தும்பூர் போஜன், துறை அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனு:

நீலகிரி மாவட்டத்தில், தேயிலை விவசாயத்தை, 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், 2 லட்சத்திற்கும் மேல் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் நம்பியுள்ளனர்.

கடந்த, 30 ஆண்டுகளுக்கு மேலாக, பசுந்தேயிலை விலை வீழ்ச்சி அடைந்து வருவதால், விவசாயிகள் குடும்பங்களை பராமரிக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், சிறு விவசாயிகள் தங்களது தோட்டங்களை சமவெளி பகுதியை சேர்ந்தவர்களுக்கு விற்பனை செய்து, சமவெளி பகுதிக்கு குடி பெயர்ந்து வருவது தொடர்கிறது. இதனால், பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் கட்டட காடாக மாறி வருகின்றன.

மனித - விலங்கு மோதல்களாலும், தேயிலை விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இயற்கை இடர்பாடுகளாலும், பசுந்தேயிலை மகசூல் குறைந்து வருகிறது. எனவே, மத்திய மாநில அரசு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து மாவட்ட விவசாயிகளை பாதுகாக்க ஒரு ஏக்கருக்கு, 10 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement