'கொடை' யில் திசைமாறும் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
கொடைக்கானல்: கொடைக்கானலில் நடக்கும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் திசை மாறி செல்வதால் விவசாயிகள் குறைகளை கூற முடியாத நிலையில் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் அவலம் தொடர்கிறது.
வழக்கமாக விவசாயிகள் குறைதீர் கூட்டம் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்து வந்தது. மாவட்ட அளவிலான விவசாயிகள் கலந்து கொள்ளும் நிலையில் மலைப்பகுதி விவசாயிகளின் குறைகள் எளிதில் கூற முடியாத நிலை இருந்தது. இதை தவிர்க்க கொடைக்கானலில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்த விவசாயிகள் கோரினர். அதன்படி கொடைக்கானலில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாதந்தோறும் நடந்து வருகிறது.
துவக்கத்தில் விவசாயிகளுக்கு பலனளித்த இக்கூட்டம் தற்போது திசைமாறி மக்கள் குறைதீர் கூட்டம் போல் நடக்கிறது. சமூக ஆர்வலர்கள், கட்சி அமைப்பினர் , விவசாயிகள் சாராத சிண்டிகேட் அமைப்பினர் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு சார்ந்த சுயநல பிரச்னைகளை முன்வைத்து கூட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் போக்கு தொடர்கிறது.
குறிப்பிட்ட நபர்கள் ஆதிக்கம் செலுத்தி விவசாயிகள் தங்களது பிரச்னையை கூற முடியாது இடையூறு ஏற்படுத்துகின்றனர். இதற்கு கூட்டம் நடத்தும் அதிகாரிகளும் உடந்தையாக செயல்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
நேற்று நடந்த கூட்டத்தில் குறிப்பிட்ட சில நபர்கள் நேர விரயத்தை ஏற்படுத்தி விவசாயிகளுக்கு வாய்ப்பளிக்கவில்லை. குறை கூறும் அத்தகைய நபர்கள் அதிகாரிகளை ஒருமையில் பேசுவது என கூட்டத்தின் மாண்பிற்கு உண்டான மரியாதை இல்லாத சூழலை உருவாக்கின்றனர். அதிகாரிகள் இவ்விஷயத்தில் சிறிதும் கண்டிப்பு காட்டுவதில்லை. விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு சம்மந்த மில்லாத பிரச்னைகளால் கூட்டம் திசை திரும்பி செல்வதால் விவசாயிகள் ஒவ்வொரு முறையும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
விவசாயிகள் பிரச்னை குறித்து சரிவர தீர்வு ஏற்படுத்துவதில்லை. மாவட்ட நிர்வாகம் கொடைக்கானலில் நடக்கும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு மாவட்ட அளவிலான அதிகாரிகளை நியமித்து கூட்டம் முறையாக நடக்கவும், விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கூட்டமாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு
-
ஸ்டாலின் மற்றும் பழனிசாமியுடன் தே.மு.தி.க., நிர்வாகிகள் சந்திப்பு
-
த.வெ.க.,வுக்கு பா.ஜ., கேள்வி
-
திருப்பரங்குன்றத்தை 'சிக்கந்தர் மலை' என்பதா? மா.கம்யூ., சண்முகத்துக்கு கடும் கண்டனம்
-
'தி.மு.க.,வை வீழ்த்துவதே ஒற்றை இலக்கு'; அண்ணாமலை பேட்டி