மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதே பஹல்காம் தாக்குதலின் நோக்கம்: அமித் ஷா

நமது டில்லி நிருபர்



மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதே பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் நோக்கம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.


டில்லியில் நடந்த பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் அமித்ஷா பேசியதாவது:
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியவர்களை ஆப்பரேஷன் சிந்தூர் மூலம் பாதுகாப்புப் படையினர் தண்டித்தனர். ஆப்பரேஷன் மகாதேவ் மூலம் பயங்கரவாத தாக்குதல் நடத்தியவர்கள் கொல்லப்பட்டனர். இது பயங்கரவாதத்திற்கு ஒரு தக்க பதிலடி ஆகும். பைசரன் பள்ளத்தாக்கில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நாட்டையே உலுக்கியது. ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சி மற்றும் சுற்றுலா மீதான புதுப்பிக்கப்பட்ட கவனத்தைத் தடம் புரளச் செய்தது.

விசாரணை

மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதை நோக்கமாகக் கொண்டது. மிகவும் துல்லியமாக பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் மூன்று பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். இதன் மூலம் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் வழக்கில் விசாரணை மூலம் பாகிஸ்தானை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும். செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பில் 40 கிலோ வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டது.

தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வருவதால் பயங்கரவாதத்தின் செயல்கள் மாறி வருகிறது. பாதுகாப்பு அமைப்புகள் வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள முன்மாதிரியாக செயல்பட வேண்டும். கண்ணுக்குத் தெரியாத எதிர்கால சவால்களை நாம் எதிர்பார்த்து அவற்றுக்குத் தயாராக இருக்க வேண்டும்.

அச்சுறுத்தல்

குற்றங்களுக்கு எதிராக 360 டிகிரி தாக்குதலைத் தொடங்க ஒரு செயல் திட்டத்தை நாங்கள் கொண்டு வர உள்ளோம். அனைத்து மாநிலங்களின் டிஜிபிக்களும் நாடு முழுவதும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை விரைவில் செயல்படுத்த வேண்டும். எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் எதிராக உறுதியாக நிற்கும் திறன் கொண்ட, வரும் தலைமுறையினருக்காக ஊடுருவ முடியாத மற்றும் வலுவான பயங்கரவாத எதிர்ப்பு கட்டமைப்பை நாம் உருவாக்க வேண்டும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Advertisement