வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4.42 லட்சம் பேர் விண்ணப்பம்; ஒரே நாளில் 2.56 லட்சம் பேர் மனு

1

சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 4.42 லட்சம் பேர் மனுக்களை சமர்ப்பித்து உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கு பின்னர் வெளியிடப்பட்ட பட்டியலில் 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். 66 லட்சம் பேர் இடம் மாறியவர்களாக காட்டப்பட்டுள்ளனர்.

தவறுதலாக நீக்கப்பட்டவர்கள் மீண்டும் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க ஒரு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு ஜன.18ம் தேதி கடைசி நாளாகும். மேலும் சிறப்பு தீவிர திருத்தப்படிவத்தை சரியாக பூர்த்தி செய்யாத 10 லட்சம் வாக்காளர்களுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீசும் அனுப்பி வருகிறது.

இந் நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க, திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இன்றுடன் 2 முகாம்கள் முடிந்துவிட்ட நிலையில், தற்போது வரை 4 லட்சத்து 42 ஆயிரத்து 70 பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கோரி விண்ணப்ப மனு அளித்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

வாக்காளர் பட்டியலில் ஆட்சேபனை தெரிவித்து 4 ஆயிரத்து 741 பேர் மனு அளித்துள்ளனர். நேற்று முன்தினம் வரை 1 லட்சத்து 85 ஆயிரம் பேர் பெயர் சேர்க்க விண்ணப்பித்து இருந்தனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 2 லட்சத்து .56 ஆயிரம் பேர் விண்ணப்ப மனு அளித்துள்ளனர்.

Advertisement