'பாரதி பாசறை'யின் 14 ஆண்டு தொடர் சொற்பொழிவு நிறைவு

திருவொற்றியூர்: திருவொற்றியூர் பாரதி பாசறை சார்பில், திருக்குறள், அவ்வையார், திருமந்திரம் குறித்த 14 ஆண்டுகள் தொடர் சொற்பொழிவு நிறைவு, 160 மாதம் திருப்புகழ் தொடர் சொற்பொழிவு நிறைவு மற்றும் பாரதி பாசறை நிறுவனர் மா.கி.ரமணன் எழுதிய 'அருளும் பொருளும்' நுால் வெளியீட்டு விழா என, முப்பெரும் விழா, நேற்று காலை திருவொற்றியூர், தேரடி, மண்டபத்தில் நடந்தது.

நுாலை ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி பிச்சாண்டி வெளியிட, 'சிவாலயம்' மோகன் பெற்றுக் கொண்டார்.

மேலும், 60 ஆண்டுகளாக சொற்பொழிவு மற்றும் 40 ஆன்மிக நுால்கள் எழுதிய பி.என்.பரசுராமனுக்கு, 'செந்தமிழ் களஞ்சியம்' எனும் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பிச்சாண்டி பேசியதாவது:

கடந்த 1982ல் பாரதியாரின் நுாற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., உரையாற்றுவதற்காக குறிப்புகளை தயார் செய்தபோது, பாரதியாரின் பாடல்களை விட வசனங்கள் அடங்கிய புத்தக திரட்டு, மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதை உணர்ந்த எம்.ஜி.ஆர்., பாரதியாரின் வசனங்களை திரட்டி மக்களிடம் கொண்டு சேர்க்க உத்தரவிட்டார். பெண் விடுதலை, சாதிய பாகுபாடுகள், விடுதலை வேள்விகள் குறித்து, பாரதியார் தன் பாடல்களில் குறிப்பிட்டதை விட, வசனங்களில் மிகுதியாக வெளிப்படுத்தியுள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement