யானைகளின் அகோர பசிக்கு இரையான 40 தென்னை மரம்

மேட்டுப்பாளையம்: சிறுமுகை சத்தியமங்கலம் சாலையில், சம்பரவல்லி அருகே பால்காரன் சாலை பகுதி உள்ளது. இப்பகுதியில் விவசாயிகள் அதிகளவில் வாழை பயிர் செய்துள்ளனர்.

யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து, தினமும் நூற்றுக்கு மேற்பட்ட வாழை மரங்களை சேதம் செய்து வருகின்றன. அதனால் இப்பகுதி விவசாயிகள் வாழைக்கு பதிலாக, தென்னங் கன்றுகளை நடவு செய்துள்ளனர். பால்காரன் சாலை பகுதி அருகே ஆறுமுகசாமி என்பவர் தோட்டத்திற்கு, தொடர்ந்து கடந்த ஐந்து நாட்களாக காட்டு யானைகள் வந்து செல்கின்றன.

இந்த யானைகள் தினமும் நான்கு, ஐந்து தென்னை மரங்களின் குருத்துப் பகுதியை அடியோடு பிடுங்கி சாப்பிட்டு சென்றுள்ளன. கடந்த ஐந்து நாட்களில், 40க்கும் மேற்பட்ட சிறிய தென்னை மரங்களை, யானைகள் சேதம் செய்துள்ளன. தென்னந்தோப்பைச் சுற்றிலும் சோலார் மின் வேலி அமைத்திருந்தனர். இந்த மின்வேலியில் உள்ள, 50க்கும் மேற்பட்ட இரும்பு கம்பங்களை, யானைகள் காலால் மிதித்து, சேதம் செய்துள்ளன. விவசாயிக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

தமிழக வனத்துறை, வேளாண் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், தென்னந்தோப்பை ஆய்வு செய்து, சேதத்துக்கு இழப்பீட்டு தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாதிக்கப்பட்ட விவசாயி தெரிவித்தார்.

Advertisement