இந்தியா - பாக்., போரை நிறுத்த உதவியதாக இந்தியருக்கு விருது வழங்கியது அமெரிக்கா

வாஷிங்டன்: இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தத்தில் முக்கிய பங்காற்றியதாகக் கூறி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தில் பணியாற்றி வரும் இந்திய வம்சாவளி யைச் சேர்ந்த ரிக்கி கில்லுக்கு தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் சிறந்த செயலுக்கான விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரலில், ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 சுற்றுலா பயணியர் கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடியாக, இந்தியா மே மாத துவக்கத்தில் 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மற்றும் பாகிஸ்தானின் முக்கிய விமானப்படை தளங்கள் உள்ளிட்டவற்றை தாக்கி அழித்தன.

தன் முயற்சியாலேயே, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் நின்றதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், திரும்பத் திரும்ப கூறி வருகிறார். ஆனால், இதை இந்தியா மறுத்துள்ளது.

இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர முக்கிய பங்காற்றியதாக கூறி, ரிக்கி கில் என்ற இந்திய வம்சாவளிக்கு, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் சிறந்த செயலுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

ரிக்கி கில், டிரம்ப் நிர்வாகத்தில், தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான மூத்த இயக்குநராகவும், அமெரிக்க அதிபரின் சிறப்பு உதவியாளராகவும் பணியாற்றி வருகிறார்.

Advertisement