மேல்சபையில் 4 இடங்களுக்கு தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு 

பெங்களூரு: மேல்சபையில் அடுத்த ஆண்டு நவம்பரில் காலியாகும், நான்கு இடங்களுக்கான தேர்தலுக்கு, தற்போதே காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

கர்நாடக மேல்சபையில், பா.ஜ., - எம்.எல்.சி.,க்களாக பதவி வகிக்கும், மேற்கு பட்டதாரி தொகுதியின் சங்கனுார், தென்கிழக்கு பட்டதாரி தொகுதியின் சிதானந்த் எம்.கவுடா, தென்கிழக்கு ஆசிரியர் தொகுதியின் சஷில் நமோஷி, காங்கிரஸ் எம்.எல்.சி.,யான பெங்களூரு ஆசிரியர் தொகுதியின் புட்டண்ணா ஆகியோரது பதவிக்காலம், அடுத்த ஆண்டு நவம்பர், 9ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நான்கு இடங்களுக்கு எம்.எல்.சி.,க்களை தேர்வு செய்ய நடக்கும் தேர்தலுக்காக, காங்கிரஸ் நேற்று வேட்பாளர்களை அறிவித்தது. மேற்கு பட்டதாரி தொகுதிக்கு மோகன் லிம்பிகே, தென்கிழக்கு பட்டதாரி தொகுதிக்கு சஷி ஹுலிகுண்டேமத், வடகிழக்கு ஆசிரியர் தொகுதிக்கு சரணப்பா மத்துார், பெங்களூரு ஆசிரியர் தொகுதிக்கு புட்டண்ணா போட்டியிடுவர் என்று அறிவித்துள்ளது.

பொதுவாக தேர்தலின் போது, கடைசி நேரம் வரை இழுத்தடித்து, வேட்பாளர்களை அறிவிப்பது தான் காங்கிரசின் வழக்கம். ஆனால், இம்முறை 11 மாதங்களுக்கு முன்பே வேட்பாளர்களை அறிவித்து ஆச்சரியப்படுத்தி உள்ளது.

Advertisement