தீர்வு கிடைக்கும் நம்பிக்கையுடன் திரண்ட மக்கள்
திருப்பூர்: கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. கலெக்டர் மனிஷ் நாரணவரே, டி.ஆர்.ஓ. கார்த்திகேயன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மகாராஜ் ஆகியோர், பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர்.
மது விருந்து கூடாது இந்து சமத்துவ கட்சியினர்: ஆங்கில புத்தாண்டு தினத்தில், திருப்பூரிலுள்ள கோவில்களில், ஆகம விதிகளுக்கு முரணாக நள்ளிரவில் வழிபாடு நடத்த தடை விதிக்கவேண்டும். புத்தாண்டு கொண்டாட்டம் என்கிற பெயரில், மது விருந்து, நடன நிகழ்ச்சிகள் நடத்துவதை தடுக்கவேண்டும். பொங்கலுக்கு அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும், பரிசு தொகுப்பில், 5 ஆயிரம் ரூபாய் வழங்கவேண்டும்.
மன மகிழ் மன்றம் கூடாது ஈரோடு கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர்: ஊத்துக்குளி தாலுகா, குன்னத்துார் பேரூராட்சியில், பெருந்துறை ெசல்லும் ரோட்டில், காமராஜர் சிலை உள்ளது. அங்கு காமராஜர் சிலை மட்டுமின்றி, அருகில் முருகன் கோவில், அரசு நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளன. அப்பகுதியில் மன மகிழ் மன்றம் அமைக்கக்கூடாது.
'நாம் தமிழர்' மனு திருப்பூர் மாநகராட்சியில் குப்பை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணக்கோரி, நாம் தமிழர் கட்சியினர் மனு அளித்தனர்.
மக்களை ஏமாற்றுவதா? பல்லடம் சமூக ஆர்வலர் கூட்டமைப்பு தலைவர் அண்ணாதுரை, ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் விளம்பர பலகையுடன் வந்து, குறைகேட்பு கூட்டத்தில் மனு அளித்தார். அவர் கூறுகையில், 'ரியல் எஸ்டேட் நிறுவனம், மாதப்பூரில் வீட்டுமனைகள் புக்கிங் செய்வோரை, ஹெலிகாப்டரில் சவாரி அழைத்துச்செல்வதாக விளம்பரப்படுத்தியது. இதை நம்பி மனை புக்கிங் செய்தவர்களை, ஹெலிகாப்டரில் அழைத்துச்செல்லாமல், முறைகேடு செய்துள்ளனர். களிமண் பூமி இது. இங்கு வீடு அமைக்க முடியாது; மக்கள் ஏமாறுவதை தடுக்க வேண்டும்' என்றார்.
சாலை சீராகுமா? இ.கம்யூ. கானுார் கிளை: அவிநாசி ஒன்றியம், கானுார் ஊராட்சியில், சின்னக்கானுார் முதல் முறியாண்டம்பாளையம் வரையிலான 5 கி.மீ., தார் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. அத்திக்கடவு திட்ட குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட இந்த ரோட்டை, ஏழு ஆண்டுகளாகியும் சீரமைக்கவில்லை.
இ-பட்டா வேண்டும் மா.கம்யூ. அங்கேரிபாளையம் கிளை செயலாளர் மனோகரன்: செட்டிபாளையம் கிராமம், அங்கேரிபாளையம் கிழக்கு வீதி யில், நத்தம் நிலவரி திட்ட அலுவலரால், கடந்த 1992 ல், பட்டா வழங்கப்பட்டது. 20 க்கும் மேற்பட்ட குடும்பத்தினரின் பட்டா மற்றும் பெயர் விவரங்கள், இதுவரை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. உடனடியாக இ- பட்டா வழங்கவேண்டும்.
மூதாட்டி கண்ணீர் இடுவம்பாளையம், பிரபு நகரை சேர்ந்த சின்னத்தாய். 80 வயது மூதாட்டியான இவர், தனது மகள்களுடன், கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். தனது மூத்த மகன், சொத்துக்களை பெற்றுக்கொண்டு, கவனிக்காததோடு, அடித்து துன்புறுத்துவதாகவும் குறைகேட்பு கூட்டத்தில் மனு அளித்தார். உடல் நலன் பாதித்த அவரை, சிகிச்சைக்காக, ஆம்புலன்ஸில் அழைத்துச்சென்றனர்.
இவ்வாறு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்கள் மனு அளித்தனர்.மொத்தம் 313 மனுக்கள் பெறப்பட்டு, பதிவு செய்யப்பட்டது.
மேலும்
-
மிகச் சிறு அணு உலைகள் வாங்க ரஷ்யாவுடன் இந்தியா பேச்சு
-
குப்பையில் தவறவிட்ட தங்க மோதிரம் ஒப்படைத்த துாய்மை பணியாளர்கள்
-
குடிசையில் ஏற்பட்ட தீ அணைத்த தீயணைப்பு வீரர்கள்
-
ஊரக வாழ்வாதார இயக்கத்தில் சுய உதவிக் குழுக்களுக்கு பயன்
-
மலை ரயில் பாதையில் கரடி கண்காணிக்க கோரிக்கை
-
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பாதிக்கப்பட்டவருக்கு நிதி வழங்கி ஆறுதல்