தனியார் பள்ளிகளுக்கு நிகரான வசதிகள்; தி.மலையில் அரசு மாதிரி பள்ளி கட்டடம் திறப்பு

சென்னை: திருவண்ணாமலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மாதிரி பள்ளியில், தனியாரை மிஞ்சும் அளவிற்கு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

திருவண்ணாமலையில், அரசு மாதிரி பள்ளி இயங்கி வருகிறது. இங்கு மாநிலம் முழுதும் இருந்து, 9 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் சிறந்த மாணவ - மாணவியர் தேர்வு செய்யப்பட்டு, தங்கும் வசதியுடன் கல்வி கற்று தரப்படுகிறது. இப்பள்ளியின் தரத்தை உயர்த்த அரசு திட்டமிட்டது.

இதையடுத்து, திருவண்ணாமலை வெளிவட்ட சாலையை ஒட்டி சமுத்திரம் கிராமத்தில், 4.50 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. கட்டுமான பணிக்கு, 56.4 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

இந்த நிதியில், மாதிரி பள்ளி கட்டடம், 52,675 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. மாணவர் விடுதி, 73,171 சதுர அடி, மாணவியர் விடுதி, 73,171 சதுர அடி பரப்பளவிலும் கட்டப்பட்டு உள்ளன.

மொத்தமாக, 1.99 லட்சம் சதுர அடியில், மாதிரி பள்ளி மற்றும் விடுதி கட்டடங்கள் கட்டப்பட்டு உள்ளன. மாதிரி பள்ளியில், 22 வகுப்பறைகள், மூன்று ஆய்வகங்கள், நுாலகம், கணினி அறை, கூட்ட அரங்கம், கழிப்ப றைகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

விடுதிகளில், வரவேற்பு அறை, மாணவர்கள் தங்கும் அறை, பொது அறை, நுாலகம், மின் அறை, மின்துாக்கி, சமையல் அறை, சலவை அறை, குளியலறை, கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

இந்த கட்டடத்தை, 15 மாதங்களில், பொதுப்பணி துறையினர் கட்டி முடித்து, கடந்த, 27ம் தேதி முதல்வர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, பொதுப்பணி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

அரசு விதிகளின்படி, பள்ளி கட்டடம் மூன்று மாடிகளாகவும், விடுதி கட்டடம் ஐந்து மாடிகளாகவும் கட்டப்பட்டு உள்ளன. விடுதியில் ஒவ்வொரு அறையிலும், 20 முதல் 25 மாணவ - மாணவியர் தங்கும் வசதி செய்யப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு தளத்திலும் வார்டன் அறை அமைக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் துணி துவைப்பதற்கு, 'வாஷிங் மெஷின்' வசதி செய்யப்பட்டு உள்ளது. கையால் துவைத்து காய வைப்பதற்கு கற்கள் உள்ளிட்ட வசதியும் உள்ளன.

பெரிய ஹோட்டல்களில் உள்ளது போல நவீன சமையல் அறையும், பாத்திரங்கள் கழுவுவதற்கும், உணவு பொருட்களை சேமிக்கவும் தனி அறைகள் உள்ளன. ஒரே நேரத்தில், 200 பேர் அமரும் வகையில் உணவருந்தும் அறை அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த புதிய மாதிரி பள்ளி கட்டடம் மற்றும் விடுதியில், 400 மாணவர், 400 மாணவியர் சேர்க்கப்பட உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement