கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி; கோழிகளை கொண்டுவர தடை
ஊட்டி: பறவை காய்ச்சல் பரவல் எதிரொலியாக, கேரள மாநிலத்தில் இருந்து கோழி மற்றும் முட்டைகளை வாகனங்களில் கொண்டுவர தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில், பறவை காய்ச்சல் பரவி உள்ளதால், நீலகிரி மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கேரள மாநிலத்தில் இருந்து, கோழிகள், முட்டைகள் மற்றும் கோழி தீவனங்கள் வாகனங்களில் ஏற்றி வருவதை தீவிரமாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கேரள எல்லையோரம் அமைந்துள்ள, ஏழு சோதனை மற்றும் தடுப்பு சாவடிகள் மற்றும் கர்நாடக மாநில எல்லையோரம் அமைந்துள்ள, ஒரு சோதனை சாவடி என, 8 சோதனை தடுப்பு சாவடிகளில் தற்போது கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. ஒரு கால்நடை உதவி மருத்துவர் தலைமையில், ஒரு கால்நடை ஆய்வாளர் மற்றும் ஒரு கால்நடை பராமரிப்பு உதவியாளர் கொண்ட குழு, காவல்துறை, வனத்துறை மற்றும் வருவாய் துறையுடன் இணைந்து, பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பறவை காய்ச்சல், கோழி, வாத்து, வான்கோழி மற்றும் வனப்பறவைகளையும், மனிதரையும் தாக்குகிறது. வெளிநாடுகளில் இருந்து, நோய் தாக்கி இங்கு வரும் வனப்பறவைகள் வாயிலாக நீலகிரியிலும் நோய் நுழைய வாய்ப்புள்ளது.
வனப்பறவைகள் பண்ணைக்குள் நுழையாமல் பார்த்துக் கொள்வதுடன், கோழி, வாத்து வான்கோழிகளை, ஒரே பண்ணையில் வைத்து வளர்ப்பதையும், வெளியாட்கள், வெளி வாகனங்கள், விலங்குகள் பண்ணைக்குள் நுழைய அனுமதிக்க கூடாது.
இதர பண்ணை உபகரணங்களை பகிர்ந்து கொள்வதை தவிர்த்து, உபகரணங்களை மாதம், இருமுறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வதுடன், கோழி பண்ணையில் அசாதாரண இறப்புகள் இருப்பின், உடனடியாக கால்நடை மருத்துவருக்கு தெரிப்பது அவசியம்.
கலெக்டர் லட்சுமி பல்யா கூறுகையில், ''பறவை காய்ச்சல் நோய் பாதித்த பண்ணைகளில் நோயுற்ற மற்றும் இறந்த கோழிகளை கையாளுவோருக்கும் சுவாச காற்று வாயிலாக, தொண்டைப்புண், காய்ச்சல், இருமல் ஆகியவை மூலம் நோய் பரவ வாய்ப்புள்ளது.
பறவை காய்ச்சல் நோய்க்கு, சிகிச்சை அல்லது தடுப்பு மருந்து தற்போது இல்லை என்பதால், கேரளா மாநிலத்தில் இருந்து கோழிகள், முட்டைகள், கோழியின எச்சம் மற்றும் கோழி தீவனங்கள் வாகனங்களில் ஏற்றி வருவது, மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது,''என்றார்