'டவுட்' தனபாலு
தமிழக துணை முதல்வர் உதயநிதி: 'பீஹார் வெற்றியை தொடர்ந்து தமிழகம் தான்' என, பா.ஜ.,வை சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எச்சரிக்கிறார்; பயமுறுத்துகிறார். சுயமரியாதை நிறைந்த தமிழகத்தை தொட்டுக்கூட பார்க்க முடியாது. அத்துமீறி நுழைந்தால், அவர்களை எப்படி விரட்டி அடிக்க வேண்டும் என, முதல்வருக்கு தெரியும். 2026 தேர்தலில், பா.ஜ., - அ.தி.மு.க.,வை ஓட ஓட விரட்டி அடிக்க வேண்டும்.
டவுட் தனபாலு: இப்படித்தான் வீராவேசமா பேசுவீங்க... அமலாக்கத் துறை ஒரு பக்கமும், வருமானவரித் துறை மறுபக்கமும் இடிக்க ஆரம்பிச்சுட்டா, டில்லிக்கு ஓடோடி போய், பார்க்க வேண்டியவங்களை பார்த்து, 'ஆப்' பண்ணிட்டு வந்துடுவீங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்: முதல்வர் ஸ்டாலினின் ஒரே நோக்கம், தன்னுடைய மகனை முதல்வராக்க வேண்டும் என்பதே. இதற்காக, காங்., கூட்டணியை இறுக்கி பிடித்துக் கொண்டிருக்கிறார். விரைவில் நானும், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலையும் அரசியல் ஆட்டம் ஆடப் போகிறோம். மோடியும், அமித் ஷாவும் எதற்காக இந்த கூட்டணியை அமைத்தனரோ, அதை நிறைவேற்றும் ஆட்டத்தை ஆடப் போகிறோம்.
டவுட் தனபாலு: பலமான கூட்டணி, ஆளுங்கட்சி என்ற தெம்புடன் இருக்கும், தி.மு.க.,வை தேர்தலில் வீழ்த்த, என்னால மட்டும் முடியாது... ஏற்கனவே, தி.மு.க., அரசுக்கு தண்ணி காட்டிய அண்ணாமலை கூட இருந்தால் தான் சரிப்பட்டு வரும் என்ற எண்ணத்தில், அவரையும் ஆட்டத்திற்கு அழைக்கிறீங்க என்பது, 'டவுட்' இல்லாம தெரியுது!
தமிழக முதல்வர் ஸ்டாலின்: இதற்கு முன் இருந்த, 100 நாள் வேலை உறுதி திட்டத்தை, பா.ஜ., அரசு இழுத்து மூடிவிட்டது. இதற்கான நிதி சுமையையும் மாநில அரசின் மீது சுமத்தி விட்டது. இதற்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, முட்டு கொடுத்து வருகிறார். தமிழக பா.ஜ., தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தயாராகும் அறிக்கையை, அ.தி.மு.க., லெட்டர் பேடில் பழனிசாமி வெளியிட்டு வருகிறார்.
டவுட் தனபாலு: கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சிகள், 'நாட்டாமை' செய்வது வழக்கம் தானே... தமிழகத்திலும், உங்க கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் தலைவர்கள் மட்டும் சுயமா சிந்திச்சா அறிக்கை விடுறாங்க... உங்க கட்சி தலைமை அலுவலகமான அறிவாலயத்தின் குறிப்பறிந்து தான் அறிக்கை விடுறாங்க என்பதில், 'டவுட்'டே இல்லையே!
இதே அமித்ஷா காலில் கதவைச் சாத்திக்கொண்டு விழுந்து, வழக்குகளிலிருந்து தாற்காலிகமாகவாவது விடுப்பு பெற்றுக்கொண்டு விட்டு, வெளியில் வீராவேசப் பேச்சு எத்தனை காலம் ஓட்ட முடியும் என்று பார்க்கலாம்