தெத்துார் தெருக்களில் ஓடும் கழிவுநீரால் பாதிப்பு

பாலமேடு: அலங்காநல்லுார் ஒன்றியம் தெத்துார் தெருக்களில் ஓடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.

இங்குள்ள தெருக்களில் வடிகால் வசதியின்றி கழிவுநீர் ரோட்டில் ஓடுகிறது. பல தெருக்களில் மாதக் கணக்கில் தேங்கி நிற்கும் கழிவுநீர் வெயிலால் காய்ந்தால்தான் உண்டு. மழைக் காலங்களில் ஒரு அடிக்கு மேல் தேங்கி நிற்கிறது. கிராம மந்தை திடல், வல்லான் கோயில் தெரு உட்பட அனைத்துத் தெருக்களிலும் ரூ.பல லட்சம் மதிப்பில் சிமென்ட் ரோடு, 'பேவர் பிளாக்' சாலைகள் அமைத்துள்ளனர். ஆனால் வடிகால் வசதி இல்லை. கிராம மந்தையில் 3 ஆண்டுகளுக்கு முன் நல்ல நிலையில் இருந்த சிமென்ட் ரோட்டின் மீது 'பேவர் பிளாக்' பதித்து மேடாக்கினர்.

இங்கும் வடிகால் வசதி இல்லாததால் வீடுகள் முன் கழிவுநீர் மாத கணக்கில் தேங்கி நிற்கிறது. சமீபத்தில் குடிநீர் குழாய் பதித்துள்ளனர். இதனால் ரோடு முழுவதும் பழுதாகி மேடு பள்ளமாக கிடக்கிறது. சிலர் வீடுகள் முன் மண்ணால் மேடாக்கி கொண்டனர். தெருக்கள் துர்நாற்றம் வீசுவதுடன், இரவும், பகலும் கொசுத் தொல்லை அதிகம் உள்ளது. நோய் பரவுவதால் ஒன்றிய நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement