தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: 'தமிழகத்தில் சில இடங்களில், இன்று இடி, மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

தமிழகத்தில், கடந்த 10 நாட்களாக, மழை இல்லாத நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று அதிகாலை வரை, பரவலாக மழை பெய்துள்ளது. நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக சென்னை பெரம்பூரில், 11 செ.மீ., மழை பெய்துள்ளது.

லட்சத்தீவு - குமரிக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால், தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், அதிகாலை லேசான பனி மூட்டம் காணப்படும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில், சில இடங்களில், குளிர் காற்று காரணமாக, குறைந்தபட்ச வெப்பநிலை, இயல்பை விட 4 டிகிரி செல்ஷியஸ் வரை, குறைவாக பதிவாகக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேக மூட்டமாக காணப்படும். சில இடங்களில், அதிகாலை லேசான பனிமூட்டம் காணப்படும். சில இடங்களில், லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement