தினமலரின் பாணி தமிழ் புலத்தின் ஆணி
இந்த ஆண்டு வந்த விஜயதசமி அன்று தினமலர் ஒரு கவித்துவமான நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தது. வடபழநி ஆண்டவர் கோவிலில் பள்ளியில் சேர இருக்கும் குழந்தைகளை- கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் மடியில் அமரவைத்து, பரப்பி வைக்கப்பட்ட நெல்லில் 'அ' என்று அவர்கள் கைபிடித்து எழுத வைக்கும் நிகழ்வு. இந்த அறிவுத் திருவிழாவிற்கு, என்னையும் அழைத்து பெருமைப் படுத்தியிருந்தது தினமலர். சின்னஞ்சிறு மழலைகளின் கை மலர் பிடித்து கல்வியின் முதல் ஸ்பரிசத்தை அவர்களோடு பகிர்ந்து கொண்டது எனக்கு மெய்ச்சிலிர்ப்பை அளித்தது. எதையும் வித்தியாசமாகவும் பண்பாட்டின் ஒளிக்கீற்றோடும் நிகழ்த்துவதுதான் தினமலர் நாளிதழின் சிறப்பு.
பிளஸ் டூ மாணவர்களுக்காக ஆண்டு தோறும் இவர்கள் நடத்தும் பயிற்சிப் பாசறை ஒரு பிரம்மாண்டமான நிகழ்வு. சாரி சாரியாக ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் வந்து கொண்டே இருப்பதைப் பார்க்கும் போதே அறிவின் அகல் பாதைக்கான வழிகளை ஒருநாளிதழ் விரியத் திறக்கும் தோற்றம் எனக்குக் கிடைத்ததுண்டு.
ஒவ்வொரு விடியலையும் ஒளிரச் செய்யும் நம்பிக்கையின் நற்பெயர் — தினமலர். தொடக்க காலத்தில் இருந்து, தமிழ்நிலத்தின் மாபெரும் நிகழ்வுகளில் எல்லாம் நீக்க முடியாத இடத்தைப் பெற்றுள்ள பெருமை தினமலருக்கு உண்டு! தமிழின் தகவையும், செய்தியின் பரபரப்பையும் சமநிலை செய்து தலைப்புகளைத் தருவதில் தினமலருக்கு நிகர் தினமலர் மட்டுமே!
மழை துளி போல மென்மையும்
மின்னல் போல் கூர்மையான கண்டனமும்
ஒருங்கே திகழும் தினமலரின் பாணி — அது தமிழ்ப் புலனத்தின் ஆணி.
பண்பாட்டின் தொன்மையையும் மாறிவரும் வாழ்வின் புதுமையையும் சமன் செய்யும் லாவகம், அரசியல் நிகழ்வுகளை சுடச்சுடப் பரிமாறும் வேகம், சமூக நிகழ்வுகளை ஒரு துலாக்கோலின் கரார்த்தன்மையோடு விவரிக்கும் நேர்த்தி - இவை தினமலர் பக்கம் நம்மை இழுக்கும். இவை மட்டுமல்ல - விளிம்பு நிலையிலிருந்து வந்து, போராடி ஜெயித்த மனிதர்களின் வாழ்வை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஊடக பேரிகையாகவும் தினமலர் தினசரி மலருகிறது. குறிப்பாக, ஜெயித்துக் காட்டிய பெண்கள் பற்றிய பதிவுகள் அடிக்கடி இடம் பெறுவது, இன்றைக்கு விரைவில் சோர்ந்துவிடும் பல பெண்களுக்கு நன்நம்பிக்கை முனையாகவே தெரியும் தானே!
நான் மிக விரும்பிப் படிக்கும் பக்கம், சிறார்களுக்கான 'பட்டம்' பக்கம்! அது அருமையான தகவல் களஞ்சியம்.
தினமலரின் திரை விமரிசனங்களும் வித்தியாசமானவை. ஒரு சாமானியனின் பார்வையிலிருந்து வாழ்வை, கலையை பார்க்கும் நறுக்குத் தெரித்த விமரிசனங்கள் அவை!
காகிதத்தின் கதறும் சத்தத்தில் கூட உண்மையின் துடிப்பைக் கேட்கச் செய்ய தினமலர் தொடர்ந்து பாடு படுகிறது.
இத்தனை ஆண்டுப் பயணத்தில் சவால்கள் இல்லாமலா இருக்கும்? அத்தனையையும் கடந்து, வாசகர்களின் நெருக்கமான நண்பனாக நின்ற தினமலரின் பயணம் என்றும் தொடரட்டும். அறிவு விதைக்கும் வரிகள் அடுத்த தலைமுறையின் நினைவிலும் ஒளிரட்டும்!
வேறுவேறு தலைமுறைகளின் கைகளைப் பிடித்தபடி, நேற்றையும் இன்றையும் இணைக்கும் பாலமாக, நாளைய தமிழ் உலகத்திற்கு திசை காட்டும் துருவ நட்சத்திரமாக தினமலரின் பணி தொடரட்டும்.
இதயம் கனிந்த வாழ்த்துக்கள்!
அன்புடன்
பாரதி பாஸ்கர்
வங்கியாளர், பேச்சாளர், எழுத்தாளர்
மேலும்
-
அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறு; ராகுலுக்கு நீதிமன்றம் சம்மன்
-
சத்ரபதி சிவாஜி குறித்து சர்ச்சை; 22 ஆண்டுகளுக்குப் பிறகு மன்னிப்பு கோரிய ஆக்ஸ்போர்டு பல்கலை
-
ஏஐ துறையில் நம்பமுடியாத சாதனை; வந்தே பாரத் ரயிலில் 16 வயது சிறுவனுக்கு சசி தரூர் பாராட்டு
-
திருப்பூர் குமரன் குன்று கோவிலை அகற்ற முயற்சி; எதிர்த்து போராடிய இந்து முன்னணியினர் 200 பேர் கைது
-
வெனிசுலா மக்களின் பாதுகாப்பு முக்கியம் ; ஜெய்சங்கர்
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 அதிகரிப்பு