பாசச்சீர் சுமந்து செல்கிறார் செல்லத்துரை
பாசச்சீர் சுமந்து செல்கிறார் செல்லத்துரை
82 வயதில் 17 கி.மீட்டர் துாரம் சைக்கிளில் தலைச்சுமையாக மகளுக்கு சீர் கொடுக்கச் சென்ற விவசாயி செல்லத்துரையின் செயல் பலரை நெகிழ்வில் ஆழ்த்தியுள்ளது.
"அப்பா" என்ற சொல்லுக்குள் பொதிந்திருக்கும் அன்பு, காலங்கள் கடந்தாலும் முதுமையின் பிடியில் சிக்குவதில்லை என்பதற்குச் சாட்சியாக மாறியிருக்கிறார் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒரு பெரியவர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லத்துரை (82). விவசாயியான இவருக்குத் துணையாக இருப்பவர் மனைவி அமிர்தவள்ளி. இவர்களுக்கு சுந்தராம்பாள் என்ற மகளும், முருகேசன் என்ற மகனும் உள்ளனர்.மகளுக்கு திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தை பிறக்கவில்லை இதன் காரணமாக மன வேதனையில் இருந்த செல்லத்துரை மகளுக்கு குழந்தை பிறந்தால் தான் தலைச்சுமையாக சீர் சுமந்து வருவதாக இறைவனை வேண்டிக் கொண்டார்
இவரது வேண்டுகோளின்படி திருமணத்திற்குப் பிறகு 12 ஆண்டுகள் கழித்து மகள் சுந்தராம்பாளுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அந்த வருடமே தானே் வேண்டிக் கொண்டபடி தனது பழைய சைக்கிளில் ஒரு பக்கம் தேங்காய், பழம், மஞ்சள் கொத்து, பச்சரிசி, வெல்லம்... மற்றொரு பக்கம் மகளுக்கும் மருமகனுக்கும்,பேரப்பிள்ளைகளுக்கும் வழங்க துணிமணிகள் மற்றும் பொங்கல் பூ எனப் பொங்கல் பண்டிகைக்குத் தேவையான அத்தனை மங்கலப் பொருட்களையும் பத்திரமாக அடுக்கிக் கொண்டார்,இவை போதாதென்று, பொங்கலின் அடையாளமான ஐந்து பருத்த கரும்புகளை ஒரு கட்டாகக் கட்டி, அதைத் தனது தலையில் சுமந்தபடி 17 கி.மீட்டர் துாரத்தில் உள்ள மகள் வீட்டிற்கு பயணமானார்.வழியில் எங்கும் சைக்கிளை நிறுத்தவில்லை தன் வீட்டை விட்டு புறப்பட்டவர் மகள் வீட்டை அடைந்தபிறகுதான் தண்ணீரே வாங்கிக் குடித்தார்.
அப்பாக்கள் இருக்கும் வரை அன்புக்கும் பஞ்சமில்லை, அறத்திற்கும் பஞ்சமில்லை என்ற நிலையில் மகளுக்கு ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும் இன்னோரு பக்கம் வயதான தந்தையை சிரமப்படுத்துகிறோமே என்ற வருத்தமும் தலைதுாக்கியது இதன் காரணமாக இந்த வருடத்தோடு இப்படி சைக்கிளில் சீர் கொண்டு வந்து தருவது போதும்பா என்று சொல்லியிருக்கிறார் அதற்கு செல்லத்துரை இல்லம்மா இது என் வேண்டுதல் மனசிலும் உடம்பிலும் தெம்பு இருக்கும் வரை கொண்டு வருவேன் என்று சொல்லிவிட்டார்.
அன்று ஆரம்பித்தது இன்றோடு 13 ஆண்டுகளாகிவிட்டது பொங்கலுக்கு முதல் நாள் அவர் சீர் கொண்டு செல்வது வழக்கம்.இவர் இப்படி சைக்கிளில் பயணப்படுவதைப் பார்த்த சிலர் தங்கள் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் உதவுவதாக சொன்னபோதும் மகளுக்கு சொன்ன அதே பதிலையே பணிவுடன் சொல்லிவிட்டார்.
அவரது இந்தப் 'பாசச் சீர்' இன்று வரை ஒரு சடங்காக அல்லாமல், ஒரு தந்தையின் கடமையாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. முதுமை அவரது உற்சாகத்தைத் தடுக்கவில்லை.
சுமார் 17 கிலோ மீட்டர் தூரம்! இந்தக் கடும் வெயிலிலும், தனது முதுமையைப் பொருட்படுத்தாமல் அவர் சீர் கொண்டு சென்ற அழகைக் கண்ட வழிப்போக்கர்கள் அப்படியே திகைத்து நின்றனர். 'இக்காலத்தில் கார், வேன்களில் சீர் கொண்டு செல்வதையே பெரும் சுமையாக நினைக்கும் தலைமுறைக்கு மத்தியில், ஒரு பெரியவர் இப்படி ஒற்றை ஆளாகச் சீர் சுமந்து செல்வதா?' என வியந்த பொதுமக்கள், நெகிழ்ச்சியுடன் அதைத் தங்கள் செல்போன்களில் படம்பிடித்தனர்.
இணையற்ற இந்தத் தந்தையின் பாசம், இயந்திரமயமாகிப் போன இந்த இணைய உலகில் ஒரு அதிசய விந்தைதான்
-எல்.முருகராஜ்
மேலும்
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 4,184 பேருக்கு முதல்வர் பதக்கம்: தமிழக அரசு அறிவிப்பு
-
சாதிக்குமா இளம் இந்தியா * 19 வயது உலக கோப்பை தொடர் துவக்கம்
-
உ.பி., அணி அபார ஆட்டம்: மெக் லானிங் அரைசதம்
-
பிஷ்னோய் கும்பலுடன் தகவல் பகிர்வு: கனடா குற்றச்சாட்டுக்கு இந்தியா திட்டவட்ட மறுப்பு
-
மிட்செல் அதிரடி சதம்: நியூசிலாந்து அணி வெற்றி
-
பகுதி நேர ஆசிரியரின் தற்கொலை முடிவு ஆளும் அரசின் மீதான கரும்புள்ளி; நயினார் நாகேந்திரன்