மதுரோ கைது: ரூ.9 லட்சம் கோடி கடன் கொடுத்த சீனாவுக்கு கலக்கம்

11

பீஜிங்: அமெரிக்க தாக்குதலுக்கு முன்னதாக நடந்த சீன பிரதிநிதி - மதுரோவின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில், சீனா லத்தீன் அமெரிக்காவில் தன் செல்வாக்கை விரிவுபடுத்த வெனிசுலாவை ஒரு மையப்புள்ளியாக கருதுகிறது. இதன் காரணமாக, சீனா இதுவரை 9.50 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன்களையும், நிதி உதவிகளையும் வெனிசுலாவுக்கு வழங்கியுள்ளது.


சீன முதலீட்டில், வெனிசுலா நீண்டகாலமாக ஒரு முக்கிய அங்கமாக விளங்கி வருகிறது. கடந்த 2006ல் அந்நாட்டின் அப்போதைய அதிபர் ஹியூகோ சாவேஸ், பல வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். இந்த ஒப்பந்தங்களின்படி, வெனிசுலா ஒரு நாளைக்கு 10 லட்சம் பீப்பாய்கள் வரை கச்சா எண்ணெயை சீனாவுக்கு வழங்க ஒப்புக்கொண்டது. இதற்கு பிரதிபலனாக, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் வெனிசுலா தற்காலிக இடத்தை பெறுவதற்கான ஆதரவு உள்ளிட்ட அரசியல் பின்னணியை சீனா வழங்கியது.


கடந்த 2008ம் ஆண்டிற்குள், சீனா தன் கச்சா எண்ணெய் தேவையில் பாதியை வெனிசுலாவிலிருந்து பெற துவங்கியது. எதிர்கால கச்சா எண்ணெய் வினியோகத்தை அடிப்படையாக கொண்டு, வெனிசுலாவுக்கு சீனா பெரிய அளவிலான கடன்களை வழங்க துவங்கியது. 2006ல் 18,000 கோடி ரூபாயாக இருந்த கடன், 2007ல் 63,000 கோடி ரூபாயாகவும், 2010ல் 2.43 லட்சம் கோடி ரூபாயாகவும் அதிகரித்தது. வெனிசுலாவின் பொருளாதாரம் பலவீனம் அடைந்த போதிலும், சீனா தொடர்ந்து கடன் வழங்கியது.


2014ல் உலகளாவிய எண்ணெய் விலை சரிந்து, அதிபர் மதுரோ அரசின் கீழ் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. அப்போதும், சீனா 90,000 கோடி ரூபாய் கடன் வழங்கியது. மேலும், 2015ல், நிலுவையில் இருந்த 4.50 லட்சம் கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தும் முறைகளை சீனா எளிதாக்கியது. கடந்த 2016 முதல், வெனிசுலாவுக்கு புதிதாக கடன் வழங்குவதை நிறுத்திய சீனா, ஏற்கனவே உள்ள கடன்களை மறுசீரமைப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.


சீனாவின் மிகப்பெரிய கடனாளிகளில் ஒன்றாக வெனிசுலா இன்றும் இருக்கிறது. எனவே, வெனிசுலாவில் ஏற்படும் எந்த ஒரு அரசியல் மாற்றமும், சீனாவுக்கு மிகப்பெரிய நிதி பாதிப்புகளை ஏற்படுத்தும். அந்த வகையில், மதுரோவின் கைது சீனாவுக்கு மிகப்பெரிய நிதி இழப்பை ஏற்படுத்தக்கூடும். மேலும், வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை அமெரிக்கா தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தால், சீனாவின் எரிசக்தி தேவைகளும் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.


@block_B@

சீனா கண்டனம்


வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்துள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சீனா, மற்ற நாடுகளின் இறையாண்மையில் தலையிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென் அமெரிக்க நாடான வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரசை, அமெரிக்க ராணுவம் நேற்று முன்தினம் அதிகாலை கைது செய்து நியூயார்க் சிறையில் அடைத்தது.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் கடத்தலுக்கு ஆதரவளித்தல், ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை மதுரோ மீது அமெரிக்கா சுமத்தியுள்ளது.

வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கு சில மணி நேரங்களுக்கு முன், லத்தீன் அமெரிக்க விவகாரங்களுக்கான நம் அண்டை நாடு சீனாவின் சிறப்பு பிரதிநிதி கியூ சியாவோகி, அதிபர் மதுரோவை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மதுரோ மற்றும் அவரது மனைவி கைதுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து சீனா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அமெரிக்காவின் இத்தகைய மேலாதிக்க நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்தையும், வெனிசுலாவின் இறையாண்மையையும் கடுமையாக மீறும் செயல்.

சர்வதேச சட்டங்களுக்கும், ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளுக்கும் கட்டுப்பட்டு, பிற நாடுகளின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை மீறுவதை அமெரிக்கா நிறுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.block_B

Advertisement