ஆண்டுக்கு ரூ. 28 லட்சம் சம்பளத்தை உதறி சொந்த தொழிலில் சாதித்த பெண்; குவிகிறது பாராட்டு

- நமது நிருபர் -

பெங்களூருவில் ஆண்டுக்கு ரூ. 28 லட்சம் சம்பளத்தை உதறி சொந்த தொழிலில் சாதித்த பெண் மீனாள் கோயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

சமீப நாட்களாக உயர் படிப்பு படித்தவர்களுக்கே, வேலை கிடைப்பது குதிரைக்கொம்பாக உள்ளது. வேலை கிடைத்தாலும் எதிர்பார்க்கும் ஊதியம் கிடைப்பது சந்தேகம். ஊதியம் குறைவு என்றாலும், கிடைத்த வேலையை செய்வோர் எண்ணிக்கை அதிகம். இத்தகைய சூழ்நிலையில், சி.ஏ., பட்டதாரி பெண்ணொருவர், கை நிறைய ஊதியம் கிடைத்த வேலையை விட்டு விட்டு, சொந்த தொழில் துவங்கி, வெற்றியும் பெற்றுள்ளார்.

பெங்களூரில் வசிக்கும் மீனாள் கோயல், 30, சி.ஏ., பட்டப்படிப்பு முடித்தவர். கே.பி.எம்.ஜி., மற்றும் டெலாய்டு நிறுவனங்களில் பணியாற்றினார். ஆண்டுக்கு 28 லட்சம் ரூபாய் ஊதியம் கிடைத்தது.
எந்த பிரச்னையும் இல்லாத, சுகமான வாழ்க்கை இருந்தும், மாதந்தோறும் ஊதியத்துக்காக காத்திருக்காமல், சுய தொழில் செய்து வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்பது, அவரது கனவாகும்.

மீனாள் கோயல், தன் ஆறு ஆண்டு அனுபவத்தை பயன்படுத்தி, சுய தொழில் ஆரம்பிக்க முடிவு செய்தார். ஏற்கனவே பார்த்து வந்த வேலையை விட்டு விட்டு, 2023ல் ஆடிட்டிங் நிறுவனம் துவக்கினார். இதுவரை அவர் மற்ற நிறுவனங்களுக்கு சென்று, ஆடிட்டிங் செய்து வந்தார். தற்போது பல்வேறு வர்த்தக நிறுவனங்கள், அவரை தேடி வந்து பணியை செய்து கொள்கின்றன.

ஆரம்பத்தில் முதல் ஆறு மாதங்கள், கடினமாக இருந்தது. எந்த நிறுவனமும் அவரை தேடி வரவில்லை. அவரிடம் இருந்த சேமிப்பு தொகை, 12 லட்சம் ரூபாயில் இருந்து நான்கு லட்சம் ரூபாயாக குறைந்தது. வருவாய் இல்லை.
தினமும் துாக்கமில்லாமல், தான் எடுத்த முடிவு சரிதானா என, தனக்கு தானே கேள்வி எழுப்பி கொண்டார்.

நஷ்டம் ஏற்பட்டாலும், மனம் தளராமல் தொடர்ந்து நிறுவனத்தை நடத்தினார். அதன்பின் ஒவ்வொரு நிறுவனமாக, இவரை நாடி வந்ததால், தொழில் சூடுபிடித்தது.
ஐந்து பேர் கொண்ட நிறுவனம், தற்போது வெற்றிகரமாக நடக்கிறது. மாதந்தோறும் 5 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார்.

மீனாள் கோயல் பணியாற்றிய நிறுவனங்களில் இவரது சக ஊழியர்களாக இருந்தவர்கள், கிடைக்கும் சம்பாத்தியத்தில் ஆடம்பரமாக வாழ்வதில், ஆர்வம் காட்டினர்.
ஆனால் இவர் தன் நிறுவனத்தை முன்னேற்றுவதில் ஆர்வம் காட்டுகிறார். இந்த நிறுவனத்தை, 100 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் நிறுவனமாக்க வேண்டும் என்பது, அவரது குறிக்கோளாகும்.

ஏதோ பிறந்தோம், வாழ்ந்தோம் என்றில்லாமல், வாழ்க்கையில் ஏதாவது சாதனை செய்ய வேண்டும் என, விரும்பியதுடன், அதை சாதித்து காட்டிய இவர், மற்ற பெண்களுக்கு முன் மாதிரியாக திகழ்கிறார்.


இது குறித்து, மீனாள் கோயல் கூறியதாவது: நிலையான ஊதியம் கிடைக்கும் வேலையை விட்டு, சுய தொழில் துவக்கினேன். பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்தேன். எதிர்நீச்சல் போட்டு வெற்றி அடைந்தேன். தொழிலை விரிவுபடுத்துவது என் குறிக்கோள். என் தொழிலில் முதன் முதலாக எனக்கு கிடைத்த 25,000 ரூபாய் காசோலை, மிகவும் மகிழ்ச்சி அளித்தது. மேலும் சுறுசுறுப்பாக செயல்பட ஆர்வத்தை ஏற்படுத்தியது.

வாழ்க்கை ஒரு முறைதான். அது, அர்த்தமுடையதாக இருக்க வேண்டும். நினைத்ததை சாதிக்க வேண்டும். பெண்கள் எதற்கும் தயங்கவோ, பயப்படவோ கூடாது. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. ஒவ்வொரு பெண்ணும் இதை, மனதில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement