வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் மேற்பார்வை அலுவலர் ஆய்வு

கள்ளக்குறிச்சி: உளுந்துார்பேட்டையில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி முகாமை, வாக்காளர் பட்டியல் திருத்த பணி மேற்பார்வை அலுவலர் ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை நகராட்சி அலுவலகத்தில், சிறப்பு முகாம் தொடர்பாக அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடந்தது. வாக்காளர் பட்டியல் மேற்பார்வை அலுவலர் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் மோகன் தலைமை தாங்கினார். மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் பிரசாந்த் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கடந்த டிச. 19 ல் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள் மற்றும் புதிய வாக்காளர்களை சேர்த்தல் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது. அதில் பெறப்பட்டுள்ள விண்ணப்பங்கள், இதுவரை நடந்த சிறப்பு முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்கள், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களால் பெறப்பட்ட விண்ணப்பங்கள் ஆகியவற்றின் மீது மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.

பெறப்பட்ட விண்ணப்பங்களை உடனுக்குடன் பதிவேற்றம் செய்திட சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து உளுந்துார்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஓட்டுச்சாவடி மையத்தில் சிறப்பு தீவிர திருத்தப் பணி சிறப்பு முகாம் ஆய்வு செய்யப்பட்டது. மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த், எறையூர், பங்காரம் தனியார் கல்லுாரிகளில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைப்பதற்கு இடம் குறித்து ஆய்வு செய்தார். ஆய்வில் டி.ஆர்.ஓ., ஜீவா, வாக்காளர் பதிவு அலுவலர்கள், தாசில்தார்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement