மேல் முறையீடு... நீதிபதியை பதவி நீக்க கோரிக்கை; தமிழக அரசின் தவறான முடிவுகளுக்கு கிடைத்தது சம்மட்டி அடி

84

நமது நிருபர்




திருப்பரங்குன்றம் வழக்கில், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் மேல் முறையீடு செய்தது மட்டுமின்றி, நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் திமுகவினர் பார்லியில் மனு கொடுத்தனர். இத்தகைய செயல்பாடுகளுக்கு சம்மட்டி அடி கொடுக்கும் வகையில் இன்று உயர்நீதிமன்ற கிளை பெஞ்ச் தீர்ப்பு வழங்கியுள்ளது.


திருப்பரங்குன்றம் வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், மலையை நேரில் சென்று பார்வையிட்ட பிறகு தீர்ப்பு வழங்கினார். அதில் தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தெளிவாக குறிப்பிட்டு உத்தரவு பிறப்பித்தார். அதை செயல்படுத்துவது, அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் மிக எளிதான வேலை.


ஆனால், அதைச் செய்யாமல், தனக்குத்தானே தலையில் மண்ணை வாரி போட்டுக் கொண்டது தமிழக அரசு. தீர்ப்புக்கு மேல் முறையீடு, அதற்கும் மேல் முறையீடு என்று வழக்கு மேல் வழக்காக போட்டதே தவிர, நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதாக இல்லை.


'தீபத்துாணில் தீபம் ஏற்றினால், இஸ்லாமியர்கள் தவறாக எண்ணிக் கொள்வார்களே, ஓட்டுக்கள் போய் விடுமே' என்ற கற்பனையான அச்சத்தில், திமுக அரசு தவறான முடிவுகளை எடுத்தது.


மேல் முறையீடு செய்தது மட்டுமின்றி, தீர்ப்பு வழங்கிய நீதிபதி மீதும் திமுகவினர் அவதுாறு பரப்பினர். கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்துக் கொண்டு, அட்டூழியம் செய்தனர். பார்லிமென்டிலும் பிரச்னை கிளப்பினர்.

சம்மட்டி அடி



நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்கிற அளவுக்கு திமுகவினரின் ஓட்டு வெறி உச்சத்துக்கு சென்றது. இத்தனைக்கும் தீர்ப்பு வெளியான நாளில், இஸ்லாமிய தரப்பில் இருந்து எந்த ஆட்சேபமும் எழவில்லை. அப்படி இருந்தும் திமுகவினர், இப்படி ஒரு மோசமான வேலையை செய்தனர். அவர்களுக்கு சம்மட்டி அடி கொடுக்கும் வகையில், இப்போது இரு நீதிபதிகள் தீர்ப்பு அமைந்துள்ளது.

மிகத்தெளிவாக...!



நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு செல்லும் என்றும், தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என்றும் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். 'தனி நீதிபதி உத்தரவு போட்ட அன்றே தீபம் ஏற்றி இருந்தால் எந்த பிரச்னையும் இல்லை' என்று நீதிபதிகள் தீர்ப்பில் மிகத்தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். இது, தமிழக அரசுக்கும், அதன் தவறான முடிவுகளுக்கு ஜால்ரா அடித்த கூட்டணிக் கட்சிகளுக்கும் வைக்கப்பட்ட 'குட்டு' என்கின்றனர், மதுரை மக்கள்.

Advertisement