மாறிமாறி ஊழல் குற்றச்சாட்டுகளை வைப்பது கொடுந்துயரம்; சீமான் சாடல்

8


ஈரோடு: திமுக - அதிமுக மாறிமாறி ஊழல் குற்றச்சாட்டுகளை வைப்பது கொடுந்துயரம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சாடியுள்ளார்.


ஈரோட்டில் நிருபர்களிடம் சீமான் கூறியதாவது: ஊழல் குறித்து மாறி மாறி குற்றச்சாட்டுகள் வைக்கின்றனர். இது எவ்வளவு பெரிய கொடுந்துயரம் என்று பாருங்கள். திருவிழா காலத்தில் நடக்கும் நாடகம் போல இதுவும் நாடகம். இதனை பார்த்து சிரித்துவிட்டு போக வேண்டியது தான்.

அதிமுக பாமக கூட்டணி எதிர்பார்த்தது தான், இது ஒன்று தான் அவர்களுக்கு வாய்ப்பு. பிப்ரவரி 21ம் தேதி 234 தொகுதிகளுக்கு தேர்தல் வேட்பாளர்கள் அறிவிப்போம்.

ஒவ்வொரு பொங்கலுக்கும் பணம் கொடுக்க விரும்பினால் போன பொங்கலுக்கு கொடுத்து இருக்க வேண்டும். இது பொய் பொங்கல் அல்ல, தேர்தல் பொங்கலாக இருக்கிறது. 30 லட்சம் மடிக்கணினியை இப்போது கொடுக்க வேண்டிய தேவை என்ன இருக்கிறது. இது மக்களுக்கான அரசியல் அல்ல.

ஜாக்டோ ஜியோ அமைப்புக்கு வாக்குறுதி அளித்திருப்பது என்பது அமைப்பை பலப்படுத்துவது, அங்கு இருக்கும் ஓட்டுக்கள் அவர்களுக்கு முக்கியம். தூய்மை பணியாளர்கள் கருத்தில் கொள்ளப்படவில்லை.

கஞ்சா பயன்பாடு அதிகரித்துவிட்டது. போதை கலாசாரம் அரசுக்கு தெரியாமல் எப்படி வருகிறது. அதுபற்றி பேச திமுகவுக்கு அருகதை இருக்கிறதா? அவர்கள் சாராயத்தை அங்கீகரித்து விற்பனை செய்கிறார்கள். விற்பனை குறைய கூடாது என்று நினைக்கிறார்கள். மாவட்ட கலெக்டர் விற்பனை மேலாளர்களை அழைத்து கூட்டம் போடுகிறார்.


அரசு பள்ளியில் படிக்க வரும் மாணவர்கள் எண்ணிக்கை குறைகிறது. இது குறித்து கவலைப்படாமல், குடிக்க வருபவர்கள் எண்ணிக்கை பற்றி கவலைப்படுவதா? போதை கலாசாரம் பற்றி பேச திமுகவுக்கு என்ன தகுதி, அருகதை இருக்கிறது. இவ்வாறு சீமான் கூறினார்.

Advertisement