என்றென்றும் ஜெயலலிதா பெயர் சொல்லும் இலவச லேப்டாப் திட்டம்!

24

நமது நிருபர்


பதவிக்காலம் முடிந்து, தேர்தல் வரக்கூடிய சூழ்நிலையில், 20 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 'என்ன தான் திட்டத்தின் பெயரை மாற்றினாலும், முதல்வரும், அமைச்சரும் முன்னின்று வழங்கினாலும், இந்த திட்டம் ஜெயலலிதாவின் பெயரைத்தான் சொல்லும்' என்கின்றனர், அரசியல் விமர்சகர்கள்.

பேருதவி



பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், அதிமுக ஆட்சிக்காலத்தில் முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டது; 2011 செப்.,15ம் தேதி, ஜெயலலிதா இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் மூலம் 52.35 லட்சம் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப்கள் வழங்கப்பட்டன. பயனுள்ள மென்பொருட்களுடன் வழங்கப்பட்ட இந்த லேப்டாப்கள் மாணவர்களுக்கு பேருதவியாக இருந்தன. அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள், கல்லுாரிகளில் படிக்கும் ஏழை எளிய மாணவர்கள், அவர்களது பெற்றோர் மத்தியில் இந்த லேப்டாப் திட்டம் பெரும் வரவேற்பை பெற்றது.


2021ல் நிறுத்தம்



தமிழகம் இன்று, டிஜிட்டல் தொழில்நுட்பத்தில், நாட்டின் பிற மாநிலங்களை காட்டிலும் வெகுவாக முன்னேற்றம் கண்டிருப்பதற்கு, இந்த திட்டத்தையும் ஒரு முக்கிய காரணமாக கருத முடியும். இப்படி ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டது, இந்தியாவிலேயே அது தான் முதல் முறை என்பதால், பல்வேறு மாநிலங்களும் இந்த திட்டத்தை கூர்ந்து கவனித்தன. தமிழகத்தை பின் தொடர்ந்து, உ.பி., கோவா, டில்லி, ஆந்திரா, மஹாராஷ்டிரா மாநிலங்களும், இலவச லேப்டாப் திட்டத்தை தொடங்கின. இப்படி பிற மாநிலங்களிலும் வரவேற்பு பெற்ற இந்த திட்டத்தை, 2021ல் ஆட்சிக்கு வந்த திமுக, எந்த காரணமும் சொல்லாமல் நிறுத்தி வைத்து விட்டது. இது பற்றி அதிமுக தொடர்ந்து கேள்வி எழுப்பியும் திமுக அசரவில்லை.

கிடப்பில்...!



தற்போது சட்டசபை தேர்தல் வர இருப்பதை முன்னிட்டு, மாணவர், பெற்றோரின் ஓட்டுகளை கவரும் நோக்கத்துடன் இந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்த அரசு முன் வந்துள்ளது. அதன்படி 20 லட்சம் மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தேர்தல் நேரத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு, பல்வேறு விமர்சனங்களை கிளப்பியுள்ளது. 'நல்ல திட்டம் என்று ஆளும் கட்சி கருதும் பட்சத்தில் நான்காண்டுகளாக கிடப்பில் போட்டு வைத்திருந்தது ஏன்' என்று கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள், திட்டத்தை கொண்டு வந்த ஜெயலலிதாவை பாராட்டி வருகின்றனர்.

ஜெ.,வின் சிந்தனை



'ஜெயலலிதாவுக்கும், அதிமுகவுக்கும் நற்பெயர் கிடைக்கும் என்ற காரணத்தால் தான் இந்த திட்டத்தை திமுக முடக்கி வைத்திருந்தது என்றும் இணையத்தில் விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன. இது பற்றி அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில், 'மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம், முன்னாள் முதல்வர் ஜெ.,வின் சிந்தனையில் உதித்தது. நான்காண்டுகளாக இதை செயல்படுத்தாத முதல்வர் ஸ்டாலின், இப்போது தோல்வி பயத்தால், தந்திரமாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்,' என்று தெரிவித்துள்ளார்.

பெயர் மாற்றம்



அதிமுக ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டபோது திட்டத்தின் பெயர், 'அம்மா மடிக்கணினி திட்டம்' என்று பெயர் இருந்தது. இப்போது திட்டத்தின் பெயரை, 'உலகம் உங்கள் கையில்' என்று தமிழக அரசு மாற்றியுள்ளது. 'திமுக ஆட்சியில் கொடுத்தாலும், முதல்வரும், அமைச்சர்களும் முன்னின்று மாணவர்களிடம் கொடுத்தாலும், பெயரை மாற்றி வைத்தாலும், இந்த திட்டம் என்றென்றும் ஜெயலலிதாவின் பெயரைத்தான் சொல்லும்' என்கின்றனர், அரசியல் விமர்சகர்கள்.

Advertisement