மதிய உணவு திட்டத்தில் ரூ.2000 கோடி ஊழல் அம்பலம்: ராஜஸ்தானில் 21 பேர் மீது வழக்குப்பதிவு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த கோவிட்19 பெருந்தொற்று காலத்தில் மதிய உணவு திட்ட பொருட்கள் வழங்கப்பட்டதில் நடந்த ரூ.2000 கோடி ஊழலை, ஊழல் தடுப்புப் பிரிவு கண்டுபிடித்துஅம்பலப்படுத்தியது. மேலும் இது தொடர்பாக 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.



கோவிட் பெருந்தொற்று காலகட்டத்தில் லாக் டவுன் போடப்பட்டிருந்தது. அப்போது பள்ளிகளும் மூடப்பட்டிருந்தது. அப்போது மாணவர்களுக்கு பருப்பு, எண்ணெய், மசாலாப்பொருட்கள் வழங்கும் திட்டத்தை ராஜஸ்தான் மாநில கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு செயல்படுத்தியது. இந்த திட்டத்தில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளது குறித்து தற்போது கண்டறியப்பட்டுள்ளது.



இது குறித்து ஊழல் தடுப்பு பிரிவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த முறைகேடுகளில் மதிய உணவு திட்ட அதிகாரிகள், மாநில கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு அதிகாரிகளுடன் சில தனியார் நிறுவனங்கள் சேர்ந்து இந்த சதித்திட்டத்தில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.



திட்ட அதிகாரிகள், குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு சாதகமாக விதிகள் மாற்றப்பட்டு, அந்த நிறுவனங்கள் போலி விநியோகஸ்தர்கள், போக்குவரத்து நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களை உள்வாடகைக்கு விட்டுள்ளன.



மேலும் பொருட்கள் விநியோகிக்கப்படாமலேயே, போலியான, உயர்த்தப்பட்ட விலைப்பட்டியல்களை சமர்ப்பித்து அரசுப்பணம் முறைகேடாகப் பெறப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு ரூ.2000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.


இந்த புகாரில் அதிகாரிகள், மத்திய சேமிப்புக் கிடங்கு ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் உரிமையாளர்கள் உட்பட 21 பேர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.


இந்த ஊழல் தொடர்பாக அமலாக்கத் துறை ஏற்கனவே விசாரணைக்குக் கோரியிருந்த நிலையில், தற்போது விசாரணையை மேற்கொண்டுள்ளோம், இந்த புகார் தொடர்பாக சில ஐஏஎஸ்,ஆர்ஏஎஸ் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், அவர்கள் மீதும் விசாரணை நடத்தப்படும். இவ்வாறு ஊழல் தடுப்பு பிரிவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement