பேச்சு, பேட்டி, அறிக்கை

அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை: ஆட்சி அதிகாரத்தில் இருக்கும், முதல்வர் ஸ்டாலின் நினைத்திருந்தால், ஆண்டுக்கு, 500, 'டாஸ்மாக்' மதுக்கடைகள் வீதம், நான்கு ஆண்டுகளில், 2,000 கடைகளை மூடியிருக்க முடியும். ஒற்றை கையெழுத்தில், மதுவை ஒழிக்க வேண்டிய முதல்வர், மது போதையை ஒழிக்க வேண்டும் என்று பேசுவது, வேடிக்கையாக உள்ளது.


ஆளுங்கட்சியினருக்கு, 'அமுதசுரபி'யாக இருந்து பணமழையை கொட்டும், 'டாஸ்மாக்' கடைகளை மூடவே மாட்டாங்க!



தமிழக காங்., துணை தலைவர், தாம்பரம் நாராயணன் பேச்சு: நடப்பாண்டில் தமிழ கம், கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடக்க உள்ளன; இந்த தேர்தல்கள், காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை தேடி தரும். கர்நாடகா, தெலுங்கானா போன்ற காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அமல்படுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை, தேர்தல் பிரசாரத்தில் வியூகமாக வகுக்க வேண்டும்.

'தமிழகத்தில் எந்த மக்கள் நலத்திட்டங்களும் அமல் படுத்தப்படலை' என, நாசுக்கா சொல்றாரோ?


தமிழக பா.ஜ., பொதுச்செயலர், ஏ.பி.முருகானந்தம் அறிக்கை: திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் கிடைத்த தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாமல், 'சுடுகாட்டில் தானே பிணத்தை எரிப்பர்' என்ற அருவருப்பான வாதத்தை வைக்கிறார், தமிழக அமைச்சர் ரகுபதி. தமிழ்க்கடவுள் முருகனின் முதலாம் படை வீட்டில் எரியும் தீபத்தை இழிவாக ஒப்பிட்டு பேசியது, தி.மு.க.,வின் கொடூர புத்தியை காட்டுகிறது. கோடிக்கணக்கான பக்தர்களின் இதயங்களில் ரத்தம் கசியும் வகையில், அமைச்சர் ரகுபதி பேச்சு அமைந்திருப்பதால், சட்டசபை தேர் தலில் அவரை மக்கள், 'டிபாசிட்' இழக்க வைப்பது உறுதி.

சட்டசபை தேர்தலில் சீனியர்களை ஓரங்கட்ட போகும் உதயநிதி, ரகுபதிக்கு முதல்ல, 'சீட்' தர்றாரான்னு பாருங்க!


அ.தி.மு.க., மாணவரணி மாநில செயலர், சிங்கை ராமச்சந்திரன் பேட்டி: 'மாற்றத்துக்கான இளைஞர்களின் குரல்' என்ற தலைப்பில், வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தோம். அதில், 'ஆட்சி மாற்றம் வேண்டும், தமிழகம் வளர்ச்சிப் பாதைக்கு செல்ல வேண்டும், சட்டம் - ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும், போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும்' என, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பதிவு செய்து, நல்ல நோக்கத்திற்காக ஒன்றிணைந்துள்ளனர்.
இப்படி பதிவு செஞ்சவங்க எல்லாம், இவரது கட்சியினரா தான் இருப்பாங்க!

Advertisement