நாசா வரலாற்றில் முதல்முறை; விண்வெளியில் இருந்து முன்கூட்டியே பூமி திரும்பும் வீரர்கள்

5


வாஷிங்டன்: மருத்துவ காரணங்களுக்காக விண்வெளியில் இருந்த 'க்ரூ 11' விண்வெளி வீரர்களை மீண்டும் பூமிக்கு திரும்புமாறு நாசா அழைத்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பல்வேறு ஆய்வுகளுக்காக நாசாவின் 'க்ரூ 11' திட்டத்தின் மூலம் விண்வெளி வீரர்கள் 4 பேர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர். இந்தக் குழுவில் அமெரிக்காவைச் சேர்ந்த செனா கார்டுமேன், மைக் பின்கே, ஜப்பானைச் சேர்ந்த கிமியா யுய், ரஷ்யாவைச் சேர்ந்த ஒலெக் பிளாடோனோவ் ஆகிய விண்வெளி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழு வரும் மே மாதம் வரை சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வுகளை மேற்கொள்வார்கள் என்று கூறப்பட்ட நிலையில், நாசா விண்வெளி வீரர்களான மைக் பின்கே மற்றும் செனா கார்ட்மேன் ஆகியோர் ஸ்பேஸ் வாக் செய்ய நேற்று ஆயத்தமாகினர்.

இந்த சூழலில், விண்வெளி வீரர்களில் ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், முன்கூட்டியே அவர்கள் பூமிக்கு திரும்ப நாசா உத்தரவிட்டுள்ளது. நான்கு பேரில் யாருக்கு உடல்நிலை மோசமடைந்தது என்ற தகவலை வெளியிடாத நாசா, பாதிக்கப்பட்டவர் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளது. இதையடுத்து, ஸ்பேஸ் வாக் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக நாசா அறிவித்துள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஆய்வுக்காக சென்ற விண்வெளி வீரர்களை பாதியில் திரும்ப அழைப்பது நாசா வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.

Advertisement