பேச்சு, பேட்டி, அறிக்கை

முன்னாள் எம்.எல்.ஏ.,வும், அ.தி.மு.க., மருத்துவ அணி இணை செயலருமான டாக்டர் சரவணன் அறிக்கை:


கடந்த நான்கரை ஆண்டு கால, தி.மு.க., ஆட்சியின் ஊழல்களை பட்டியலிட்டு, 'அது குறித்து விசாரிக்க, உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்' என, தமிழக கவர்னரிடம் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார். நான்கரை ஆண்டுகளில், 4 லட்சம் கோடி ரூபாய்க்கு ஊழல் செய்து, தி.மு.க., அரசு சாதனை படைத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். தி.மு.க., செய்த ஊழல் பணத்தில், ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா, 1 லட்சம் ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கலாம்.

ஊழல் பட்டியல் மீது கவர்னர் நடவடிக்கை எடுக்க ஆரம்பிச்சிட்டா, சமாதான கொடியை எடுத்துட்டு, ஆளுங்கட்சியினர் டில்லிக்கு பறந்துடுவாங்க!



பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:

தி.மு.க., அரசு அறிவித்த உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம், தேர்தலுக்கு முன்பாக நடைமுறைக்கு வரப்போவதில்லை. அரசு ஊழியர்களின் ஓட்டுகளை ஏமாற்றி வாங்கி, வெற்றி பெற்று விட வேண்டும் என்பதற்காகவே, இத்திட்டத்தை தி.மு.க., அறிவித்துள்ளது. ஒருவேளை தி.மு.க., மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தாலும், ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தாது. எனவே, தி.மு.க., அரசை நம்பி அரசு ஊழியர்கள் ஏமாந்து விடாதீர்கள். உங்களை ஏமாற்றிய தி.மு.க., அரசை வரும் தேர்தலில் வீழ்த்துங்கள்.

'தந்தையை ஏமாற்றிய மகனை வீழ்த்துங்க'ன்னு ராமதாஸ் அணி பா.ம.க.,வினர், இவருக்கு எதிரா கிளம்பிட்டாங்களே!


தி.மு.க., செய்தி தொடர்புக்குழு துணை தலைவர் மருது அழகுராஜ் அறிக்கை:


ஏழு ஆண்டுகளாக, ஜி.எஸ்.டி.,யின் அதிகமான வரி விகிதங்களால், நாட்டு மக்களை வரிக்குதிரைகளாக்கி விட்டு, எட்டாம் ஆண்டில், அதுவும் பீஹார் சட்டசபை தேர்தலுக்காக, வரி குறைப்பு செய்த பா.ஜ., தரப்பு, தேர்தலுக்கு முன் பழைய ஓய்வூதிய திட்டத்தை, தமிழக அரசு அறிவித்திருப்பதாக குறை கூறுவது, தங்கத்தை தரமில்லை என சொல்லும் தகரத்தின் செயல் அல்லவா.

கடந்த, 2021 சட்டசபை தேர்தலில் தந்த வாக்குறுதியை, 2026 தேர்தலின்போது அறிவித்ததில் என்ன பெருமை வேண்டி கிடக்கு?


த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை:



ஆவின் நிறுவனம், அதன் மாட்டு தீவன உற்பத்தி ஆலைகளை, தனியாரிடம் ஒப்படைக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இது, தமிழக அரசால் மாட்டுத்தீவன உற்பத்தி ஆலையை நிர்வகிக்க முடியவில்லையா அல்லது தனியாருக்கு தாரை வார்த்துக் கொடுக்க முன் வருகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
நகரங்களில் குப்பை அள்ளும் பணிகளையே தனியார் மயமாக்கியவங்க, ஆவின் மாட்டு தீவன ஆலைகளை இவ்வளவு நாட்கள் விட்டு வச்சதே பெருசு!

Advertisement