பழிக்கு பழி!
'இத்தனை ஆண்டுகளாக கட்டிக் காத்த அரசியல் செல்வாக்கிற்கு ஆபத்து வந்து விடும் போலிருக்கிறதே...' என, கவலையில் ஆழ்ந்துள்ளார், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவரும், பீஹார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ்.
உடல்நிலை பாதிக்கப்பட்டதால், தன் அரசியல் வாரிசாக, இளைய மகன் தேஜஸ்வி யாதவை அறிவித்தார், லாலு பிரசாத். இதனால், கடுப்பான மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், தந்தையுடன் மோதல் போக்கை பின்பற்றினார். பொறுத்து பொறுத்து பார்த்த லாலு, தேஜ் பிரதாப்பை அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கினார்.
இதற்கு பதிலடியாக, ஜனசக்தி ஜனதா தளம் என்ற கட்சியை, தேஜ் பிரதாப் துவக்கி, தேர்தலிலும் போட்டியிட்டார். கடந்த டிசம்பரில் நடந்த பீஹார் சட்டசபை தேர்தலில், சில தொகுதிகளில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தோல்விக்கு, தேஜ் பிரதாப் முக்கிய காரணமாக இருந்தார்.
இந்நிலையில், தன் தந்தைக்கு மேலும் ஒரு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார், தேஜ் பிரதாப். பீஹார் துணை முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான விஜய் குமார் சின்ஹாவை சமீபத்தில் சந்தித்து, நீண்ட நேரம் பேசியுள்ளார்.
விரைவில் வரவுள்ள மகர சங்கராந்தி பண்டிகைக்கு, தன் வீட்டிற்கு வரும்படி, தேஜ் பிரதாப் விடுத்த அழைப்பையும், விஜய் குமார் சின்ஹா ஏற்றுள்ளார். இதனால், 'தேஜ் பிரதாப் எப்போது வேண்டுமானாலும் பா.ஜ.,வில் இணையலாம்' என, பீஹார் அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது.
'தனக்கு பதவி கொடுக்காத தந்தையை, தேஜ் பிரதாப் பழி வாங்குகிறாரோ...?' என, பீஹார் மக்கள் கூறுகின்றனர்.