பெங்களூரு 'திரில்' வெற்றி: கடைசி பந்தில் மும்பை ஏமாற்றம்

நவி மும்பை: நாடின் டி கிளார்க் அரைசதம் விளாச, பெங்களூரு அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது. கடைசி பந்தில் மும்பை அணி ஏமாற்றியது.

இந்தியாவில், பெண்களுக்கான பிரிமியர் லீக் கிரிக்கெட் ('டி-20') 4வது சீசன் நடக்கிறது. நவி மும்பையில் (மகாராஷ்டிரா) உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடந்த முதல் போட்டியில், பெங்களூரு, மும்பை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பெங்களூரு அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா, 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
மும்பை அணிக்கு அமேலியா கெர் (4), நாட் சிவர்-புருன்ட் (4) ஏமாற்றினர். கமலினி (32), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (20) ஆறுதல் தந்தனர். மும்பை அணி 11 ஓவரில், 67/4 ரன் எடுத்து தடுமாறியது. பின் இணைந்த நிகோலா கேரி (40), சஜீவன் சஜனா (45) ஜோடி நம்பிக்கை தந்தது.

மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 154 ரன் எடுத்தது. பெங்களூரு சார்பில் நாடின் டி கிளார்க் 4 விக்கெட் வீழ்த்தினார்.

நாடின் அபாரம்: சவாலான இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு கேப்டன் ஸ்மிருதி (18), கிரேஸ் ஹாரிஸ் (25) சுமாரான துவக்கம் கொடுத்தனர். ஹேமலதா (7), ரிச்சா கோஷ் (6), ராதா யாதவ் (1) ஏமாற்றினர். அருந்ததி ரெட்டி (20) ஆறுதல் தந்தார்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 18 ரன் தேவைப்பட்டது. நாட் சிவர் புருன்ட் வீசிய 20வது ஓவரின் முதலிரண்டு பந்தை வீணடித்த நாடின் டி கிளார்க், அடுத்த 2 பந்தில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து அரைசதம் கடந்தார். ஐந்தாவது பந்தை சிக்சருக்கு அனுப்பிய நாடின், கடைசி பந்தில் பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

பெங்களூரு அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 157 ரன் எடுத்து வெற்றி பெற்றது. நாடின் (63), பிரேமா ரவாத் (8) அவுட்டாகாமல் இருந்தனர்.


ஜாக்குலின் நடனம்

போட்டி துவங்குவதற்கு முன், துவக்க விழா நடந்தது. நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் 40, தனது துள்ளலான நடனத்தின் மூலம் ரசிகர்களை மகிழ்வித்தார். பாடகர் 'யோ யோ' ஹனி சிங் 42, 'லுங்கி டான்ஸ்' உள்ளிட்ட பிரபல பாடல்களை பாடினார்.

Advertisement