சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த சீனப்பெண் கைது

1

லக்னோ: இந்தியா - நேபாளம் எல்லை வழியாக சட்டவிரோதமாக ஊடுருவிய சீனப் பெண்ணை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தியா - நேபாளம் எல்லை வழியாக பெண் ஒருவர், மஹாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் இருக்கும், பைரியா பசார் பகுதிக்குள் நுழைந்துள்ளார். அப்போது, எல்லையில் பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாப்பு படை வீரர்கள், அந்தப் பெண்ணை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, அந்தப் பெண் சீனாவைச் சேர்ந்தவர் என்பதும், உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைய முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, சீனப் பெண்ணை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில், அவருடன் கண்டெடுக்கப்பட்ட சீட்டில் இருந்த தகவலின்படி, அந்தப் பெண் சீனாவைச் சேர்ந்த ஹுவாஜியா ஜி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அந்தப் பெண் சீன மொழியை மட்டும் பேசுவதால், அதிகாரிகளால் வேறு தகவல்களை திரட்ட முடியவில்லை. அவர் சீனாவில் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்?, இந்தியாவுக்குள் வந்ததற்கான நோக்கம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement