நிதி நிர்வாகத்தில் நிரூபித்து காட்டிய என் மனைவி!
குடும்பத்தின் நிதி நிர்வாகம் குறித்து கூறும், திருச்சியைச் சேர்ந்த க.முத்துசாமி: நான், திருச்சியில் உள்ள பொதுத்துறை நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறேன். திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகின்றன.
திருமணத்திற்கு முன்பிருந்தே, 'கிரெடிட் கார்டு' எனும் கடன் அட்டையை இஷ்டப்படி பயன்படுத்துவேன்; மொத்த கட்டணத்தையும் சரியான தேதியில் செலுத்தி விடுவேன்.
திருமணம் ஆனதும் எங்கள் தேவைகளும், விருப்பங்களும் அதிகரித்தன. கடன் அட்டை பயன்படுத்தினால், நிறைய சலுகைகள் கிடைக்கும் என நினைத்து, தேவை இல்லாத போதும் பொருட்களை வாங்கி குவித்தேன்.
இதனால், ஒரு கட்டத்தில் கடன் அட்டை கட்டணத்தை முழுமையாக கட்டுவதற்கு மிகுந்த சிரமப்பட்டேன். குடும்பத்தின் அடிப்படை தேவைகளுக்கு கூட பணம் இல்லாமல் தடுமாறினேன். இதன்பின், என் மனைவி குடும்ப நிதி நிர்வாகத்தை தன் கையில் எடுத்துக் கொண்டார்.
மாத வரவு - செலவை பக்காவாக திட்டமிட துவங்கினார். விருப்பங்களை இரண்டாம் இடத்தில் வைத்து, அடிப்படை தேவைகளுக்கு முன்னுரிமை கொடுத்து, மாதாந்திர வரவு - செலவு திட்டத்தை செயல்படுத்தினார். என் கடன் அட்டையை, என் மனைவி வைத்துக் கொண்டு, தேவைப்படும் போது மட்டும் தருவதை வழக்கமாக்கினார். அதுவும் என்ன செலவு செய்கிறேன் என்பதிலும் கவனமாக இருக்க துவங்கினார்.
நானும், கடன் அட்டையை அவசியம் இல்லாத விஷயங்களுக்கு பயன்படுத்த மாட்டேன் என, முடிவெடுத்தேன்.
மனைவியின் முயற்சியால், கடந்த 10 மாதங்களாக கடன் அட்டையை பயன்படுத்தாமலே, வரவுக்கு ஏற்ற செலவுகளை செய்ய கற்றுக் கொண்டேன்.
எப்போதும் செலவுகளை வரைமுறைப்படுத்தினாலே போதும்... பண சிக்கல்களுக்கு தீர்வு கிடைத்து விடும் என்பதை அனுபவத்தில் உணர்கிறேன்.
மனைவியின் தொடர் முயற்சி காரணமாக, செலவுகள் போக சேமிப்புக்கும் பணம் ஒதுக்க முடிகிறது.
வருமானத்திற்குள் செலவுகளை கட்டுப்படுத்த முடியாமல் நான் தடுமாறிய சூழலில், குடும்பத்தின் நிதி நிர்வாகத்தை கையில் எடுத்து, 'என்னால் முடியும்' என்று நிரூபித்து காட்டினார் மனைவி.
குடும்பத்தின் நிதி பாதையை சரியான வழியில் கொண்டு செல்லும் திறன் எவரிடம் உள்ளதோ, அவர் நிதி நிர்வாகம் செய்யும்போது, நிஜமாகவே வாழ்க்கை வளமாகும் என்பதை உணர்ந்து கொண்டேன்.
எவ்வளவு வருமானம் வருகிறது என்பது முக்கியமல்ல; வரும் வருமானத்திற்குள் செலவுகளை எப்படி நிர்வகிக்கிறோம் என்பதில் தான் வளமான வாழ்க்கை அடங்கி இருக்கிறது.
மேலும்
-
சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த சீனப்பெண் கைது
-
மரத்தை வெட்டினால் ரூ.1 லட்சம் அபராதம்; சென்னை மாநகராட்சி
-
200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி; முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
-
திருச்சியில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கு விழா
-
மலேசிய ஓபன் பாட்மின்டன்; அரையிறுதியில் பி.வி. சிந்து ஏமாற்றம்
-
ஜனவரி 12ல் பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட் விண்ணில் பாய்கிறது; இன்று இஸ்ரோ தலைவர் திருப்பதியில் வழிபாடு