தமிழகத்தில் இன்று 12 மாவட்டம், நாளை 5 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!

1

சென்னை: தமிழகத்தில் இன்று (ஜனவரி 10) 5 மாவட்டங்களில் மிக கனமழையும் (ஆரஞ்சு அலெர்ட்), 7 மாவட்டங்களில் (மஞ்சள் அலெர்ட்) கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது. மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு இலங்கை கடலோரப்பகுதிகளில், திரிகோணமலை (இலங்கை) மற்றும் யாழ்ப்பாணம் (இலங்கை) இடையே, முல்லைத்தீவிற்கு (இலங்கை) அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று மாலை கரையை கடக்கக்கூடும்.

கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழையும் (ஆரஞ்சு அலெர்ட்), செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழையும் (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ளது.



சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement