விதிகளை குறைத்து வர்த்தகத்தை எளிதாக்க செபி முயற்சி

இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி, பங்குச் சந்தைகளில் வர்த்தகம் செய்யும் முறையை எளிதாக்க முடிவு செய்துள்ளது. இதன் முக்கிய நோக்கம், குழப்பமான விதிகளைக் குறைத்து, பங்குச் சந்தையில் ஈடுபடுபவர்களுக்கு அதாவது முதலீட்டாளர்கள் மற்றும் புரோக்கர்களை ஊக்குவிப்பதாகும்.

1 விதிகள் ஒருங்கிணைப்பு: பங்குச் சந்தைகள் மற்றும் கமாடிட்டி டெரிவேட்டிவ்ஸ் ஆகியவற்றுக்கான வெவ்வேறு முதன்மைச் சுற்றறிக்கைகளை ஒன்றிணைத்து, வர்த்தகம் தொடர்பான ஒரே சீரான ஒருங்கிணைந்த விதியாக மாற்ற முன்மொழியப்பட்டுள்ளது.

2 கிளியரிங் மற்றும் செட்டில்மென்ட்: பங்குச் சந்தை மற்றும் கிளியரிங் கார்ப்பரேஷன் ஆகியவற்றின் பொறுப்புகளைத் தெளிவாகப் பிரிக்க, அவற்றின் விதிமுறைகள் தனித்தனியாக்கப்படுகின்றன. செட்டில்மென்ட் மற்றும் அபராத நடைமுறைகள் இனி கிளியரிங் கார்ப்பரேஷன்களின் சுற்றறிக்கையின் கீழ் கொண்டுவரப்படும்.
Latest Tamil News
3 பல்க் டீல்: 'பல்க்' மற்றும் 'பிளாக்' டீல்கள் பற்றிய விபரங்களை வெளியிடும் முறை எளிமையாக்கப்படுகிறது. இனி இந்த தகவல்கள் முதலீட்டாளர்களின் பான் எண் அடிப்படையில் நேரடியாக பங்குச் சந்தைகளால் வெளியிடப்படும்.

4 சர்க்யூட் பிரேக்கர்: சந்தை அளவிலான 'சர்க்யூட் பிரேக்கர்'கள் துாண்டப்படும் நேரங்கள் மற்றும் வர்த்தக நிறுத்த காலங்கள் ஆகியவை முதலீட்டாளர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் அட்டவணைப்படுத்தப்படும்.

5 மார்ஜின் டிரேடிங்: மார்ஜின் டிரேடிங் வசதி வழங்கும் தரகர்களின் குறைந்தபட்ச நிகர மதிப்பு 3 கோடி ரூபாயிலிருந்து 5 கோடி ரூபாயாக உயர்த்தப்படுகிறது. மேலும், தணிக்கையாளர் சான்றிதழ்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு, நிதிநிலை முடிவுகளின் காலக்கெடுவுடன் (45 முதல் 60 நாட்கள்) பொருந்திப் போகுமாறு மாற்றப்பட்டுள்ளது.

6 ஷார்ட் செல்லிங் : கையில் பங்குகள் இல்லாமலேயே விற்பனை செய்யும் 'ஷார்ட் செல்லிங்' தொடர்பான விதிகள் தெளிவுபடுத்தப்படும். ஷார்ட் செல்லிங் நிலவரங்கள் வாராந்திர முறைக்குப் பதிலாக, தினசரி அடிப்படையில் இணையத்தளத்தில் வெளியிடப்படும்.

7 இதர மாற்றங்கள்: பங்குச் சந்தையின் விடுமுறைப் பட்டியல் மற்றும் வர்த்தக நேரங்கள் குறித்த விவரங்கள், இனி ஈக்விட்டி மற்றும் கமாடிட்டி ஆகிய அனைத்து பிரிவுகளுக்கும் சேர்த்து ஒரே பொதுவான பகுதியாக ஒருங்கிணைக்கப்படும்.

Tamil News

இது, 'வர்த்தக பிரிவுகள் , வர்த்தக நேரங்கள் மற்றும் விடுமுறைகள்' என்ற புதிய தலைப்பின் கீழ் கொண்டுவரப்படுவதால், முதலீட்டாளர்கள் அனைத்து சந்தைப் பிரிவுகளின் விடுமுறை விபரங்களையும் ஒரே இடத்தில் எளிதாக அறிந்துகொள்ள வழிவகை செய்யும்

இந்த மாற்றங்கள் குறித்து, பொதுமக்கள் மற்றும் பங்குச் சந்தையில் உள்ளவர்கள் தங்கள் கருத்துக்களை வரும் 30-ம் தேதிக்குள் செபியிடம் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

Advertisement