ஜி.பி.ஏ., தேர்தலுக்கு பின் முதல்வர் மாற்றமா? காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் விவாதம்

பெங்களூரில் உள்ள ஐந்து மாநகராட்சிகளுக்கான தேர்தலை நடத்த, உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ள உள்ள நிலையில், அதற்கு முன் முதல்வர் மாற்றம் நடக்குமா அல்லது அதன்பின் நடக்குமா என, காங்கிரசுக்குள் சூடான விவாதம் எழுந்து உள்ளது.

கர்நாடகாவில், கடந்த நவம்பரில் முதல்வர் மாற்றம் ஏற்படும் என, பெரும் பரபரப்பு நிலவியது. ஆனால், கர்நாடகாவில் நீண்ட காலம் முதல்வராக இருந்தவர் என்ற சாதனையை சித்தராமையா படைத்து உள்ளார்.

எனவே, பட்ஜெட்டை தாக்கல் செய்த பின், முதல்வர் மாற்றப்படலாம் என்ற பேச்சு அடிப்பட்டது.

சித்தராமையா தனது, 17வது பட்ஜெட்டை, மார்ச் முதல் வாரத்தில் தாக்கல் செய்வார் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக துறை அதிகாரிகளுடன் ஆலோசனையை துவக்கி உள்ளார்.

இதன்பின், முதல்வர் மாற்றம் நிகழும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று முன்தினம் ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் ஐந்து மாநகராட்சிகளுக்கும், ஜூன், 30ம் தேதிக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என, மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

இன்னொரு பக்கம், அசாம் மாநில தேர்தலுக்கான பார்வையாளராக, துணை முதல்வர் சிவகுமாரை காங்கிரஸ் மேலிடம் நியமித்து உள்ளது. இம்மாநில தேர்தல், மார்ச் அல்லது ஏப்ரலில் நடக்கும். அதன்பிறகே, மாநகராட்சிகளுக்கான தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது.

தற்போது, ஜி.பி.ஏ.,வின் ஐந்து மாநகராட்சிகளுக்கான தேர்தல், முதல்வர் சித்தராமையாவுக்கும், துணை முதல்வர் சிவகுமாருக்கும், கவுரவ பிரச்னையாக மாறி உள்ளது.

ஐந்து மாநகராட்சிகளையும் காங்கிரஸ் பிடிக்க வேண்டும் என்றால், இருவரும் இணைந்து தேர்தலை பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.


இந்த காலகட்டத்தில் முதல்வர் மாற்றத்தை கட்சி தலைமை மேற்கொள்ளுமா அல்லது தேர்தலுக்கு பின் முதல்வரை மாற்றுமா என, கட்சி தலைவர்களும், தொண்டர்களும் தீவிரமாக விவாதித்து வருகின்றனர்.



- நமது நிருபர் -:

Advertisement