2 ஆண்டாக அமலுக்கு வராத முதல்வரின் அறிவிப்பு: ஓய்வூதியம் எதிர்பார்த்து 80,000 முதியோர் காத்திருப்பு

5

சென்னை: 'தமிழகத்தில், புதிதாக 80,000 பேருக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படும்' என முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இரண்டு ஆண்டுகளாகியும், உத்தரவு அமலுக்கு வரவில்லை. அதேநேரம், ஏற்கனவே ஓய்வூதியம் பெற்றவர்களில் 16,684 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.


தமிழகத்தில், ஏழ்மை மற்றும் சமூகத்தின் விளிம்பு நிலையில் இருப்போரை பாதுகாக்க, வருவாய் துறை வாயிலாக சமூக பாதுகாப்பு திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன.

விண்ணப்பம் அதிகரிப்பு




இதன்படி, முதியோர் ஓய்வூதிய திட்டம், ஆதரவற்ற விதவை ஓய்வூதியம், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம், 50 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழை பெண்களுக்கான ஓய்வூதியம், உழவர் பாதுகாப்பு திட்டம், இலங்கை அகதிகளுக்கான ஓய்வூதியம் ஆகிய தலைப்புகளில் இத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.


முதியோர், ஆதரவற்ற விதவை, மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதிய திட்டத்தில் குறிப்பிட்ட தொகையை, மத்திய அரசு வழங்குகிறது. மீதித் தொகை தமிழக அரசால் வழங்கப்படுகிறது.


இத்திட்டங்களில், 34 லட்சம் பேர் பயனாளிகளாக உள்ள நிலையில், இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. ஓய்வூதியம் கோரி வரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது.


மாதாந்திர ஓய்வூதியத் தொகை 1,000 ரூபாயை, 1,200 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு 2023ல் அறிவித்தது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் இலங்கை அகதிகளுக்கான ஓய்வூதியம், 1,500 ரூபாயாக உயர்த்தப்பட்டது.


தமிழகத்தில், 34.36 லட்சம் பேர், இத்திட்டங்களில் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். புதிதாக 80,000 பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் 2024ல் அறிவித்தார். அதன்பின், இத்திட்டங்களில், 50,000 பேருக்கு புதிதாக ஓய்வூதியம் வழங்கப்படும் என, வருவாய் துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் கடந்தாண்டு சட்டசபையில் அறிவித்தார். ஆனால், முதல்வர், அமைச்சர் அறிவிப்புகளின்படி புதிதாக யாருக்கும் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.

16,684 பேர் நீக்கம்




இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: வருவாய் துறை ஆவணங்களில், 2022ம் ஆண்டு, 34 லட்சத்து, 52,758 பேர் ஓய்வூதியம் பெறுவதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், 2025ல், 34 லட்சத்து, 36,074 பேர் மட்டுமே ஓய்வூதியம் பெறுவதாக அரசு அறிவித்துள்ளது.


கடந்த நான்கு ஆண்டுகளில், ஓய்வூதியம் பெறுவோர் எண்ணிக்கையில், 16,684 பேர் குறைந்துள்ளனர். அதேநேரம், புதிதாக 80,000 பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பும் செயல்பாட்டிற்கு வரவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.


@block_B@

அதிகாரிகள் பதில் என்ன?


வருவாய் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில், சமூக பாதுகாப்பு திட்டங்களில், 34.36 லட்சம் பேர் ஓய்வூதியம் பெறுகின்றனர். அவர்களில், 13.67 லட்சம் பேர் மட்டுமே முதியோர் ஓய்வூதியம் பெறுகின்றனர். இத்திட்டத்தில் சேர, கடந்த நான்கு ஆண்டுகளில், 7.50 லட்சம் விண்ணப்பங்கள் புதிதாக வந்துள்ளன. இவற்றை பரிசீலிப்பதற்கான நடைமுறையில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

ஓய்வூதியம் பெற, 60 வயதை கடந்து இருக்க வேண்டும், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் இடம்பெற்று இருக்க வேண்டும் என்ற தகுதி மட்டுமே பார்க்கப்பட்டது. ஆனால், ஊராட்சிகள், நகராட்சிகள் பராமரிக்கும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியல் தொடர்பாக, நிதித்துறை ஆட்சேபம் தெரிவித்தது.

இதனால், எதன் அடிப்படையில், முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளை தேர்வு செய்வது என்பதில் பிரச்னை நிலவுகிறது. இவ்விஷயத்தில் தமிழக அரசின் வழிகாட்டுதல்களுக்காக காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.block_B

Advertisement