இளம் தலைமுறைக்கு வழிகாட்டி கோலி: கவாஸ்கர் பாராட்டு
இந்துார்: ''கோலி ஒருபோதும் நம்பிக்கையை இழக்க மாட்டார். கடைசி வரை போராடுவார். இது இளம் வீரர்களுக்கு சிறந்த பாடம்,''என கவாஸ்கர் தெரிவித்தார்.
இந்துாரில் (ம.பி.,) நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்திடம் வீழ்ந்தது. இந்திய மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடரை வென்று நியூசிலாந்து (2-1) வரலாறு படைத்தது. வில்லியம்சன், ரச்சின் ரவிந்திரா, சான்ட்னர், மாட் ஹென்றி, ஜேக்கப் டபி போன்ற அனுபவ வீரர்கள் இல்லாமல் சாதித்தது. கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல், லெனாக்ஸ், டேரில் மிட்சல், கிளன் பிளிப்ஸ் அசத்த, தொடரை கைப்பற்றியது. இந்தியாவை பொறுத்தவரை இந்துாரில் அனுபவ கோலி சதம் விளாசிய போதும், கரை சேர முடியவில்லை. தனிநபராக போராடிய இவர், 124 ரன் எடுத்தார். ஒருநாள் அரங்கில் 54வது சதம் எட்டினார்.
இது பற்றி இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் கூறியது: ஒரு பணியை நன்கு துவங்கினால், பாதி முடிந்ததற்கு சமம். ஆனால், நியூசிலாந்து தொடரில் இந்திய அணிக்கு வலுவான துவக்கம் கிடைக்கவில்லை. இதனால் பெரிய ஸ்கோர்களை 'சேஸ்' செய்ய முடியவில்லை. இந்துார் போட்டியில் 338 ரன்னை விரட்டிய நிலையில், 159 ரன் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. தனிஒருவனாக போராடிய கோலிக்கு நல்ல 'கம்பெனி' கிடைக்கவில்லை. ராகுல் போன்ற அனுபவ வீரர் அவுட்டாகும் போது மீள்வது கடினம். நிதிஷ் குமார், ஹர்ஷித் ராணா போன்றவர்கள் திறமை நிரூபிக்காதவர்கள். இவர்களது துணையுடன் இமாலய இலக்கை எட்டுவது சிரமமான விஷயம்.
கோலியை பொறுத்தவரை எதற்கும் அசராதவர். தனக்கு என்று ஒரு 'இமேஜ்' உண்டு என்றெல்லாம் நினைக்க மாட்டார். ரன் குவிப்பதே தனது பணி என்பதை அறிந்தவர். ஆட்டத்தை கவனமாக துவக்குவார். அவசியம் ஏற்பட்டால், அதிரடியாக ஆடுவார். மற்றவர் எதிர்பார்ப்புக்கு ஏற்ப விளையாட மாட்டார். இவரது ஆட்ட அணுகுமுறை அருமையாக இருக்கும். சூழ்நிலைக்கு ஏற்ப பொறுப்பாக விளையாடுவார். ஒருபோதும் நம்பிக்கையை இழக்க மாட்டார். கடைசி வரை முயற்சி செய்வார். இளம் வீரர்களுக்கு இதுதான் சிறந்த பாடம். உங்களுக்கு என்று ஒரு 'இமேஜ்' இருக்கிறது என நினைக்காதீர்கள். சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடுங்கள். அப்போது நீங்கள் கற்பனை செய்ததை விட மிகவும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்துவீர்கள்.
விராத் கோலி ஒருமுனையில் வழிகாட்ட, மறுமுனையில் ஹர்ஷித் ராணா கடைசி கட்டத்தில் விளாசினார். முந்தைய ஏமாற்றங்கள் என எதைப்பற்றியும் கவலைப்படாமல் துணிச்சலாக அரைசதம் விளாசினார்.
இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.
யார் 'வில்லன்'
கவாஸ்கர் கூறுகையில்,''இந்துார் போட்டியில் இந்திய அணிக்கு 'பீல்டிங்' தான் வினையாக அமைந்தது. எதிரணியினர் எளிதாக 'சிங்கிள்ஸ்' எடுக்க, நமது வீரர்களில் சிலர் அனுமதித்தனர். அவர்களின் பெயரை சொல்ல விரும்பவில்லை. இந்த தவறு காரணமாக டேரில் மிட்சல், கிளன் பிலிப்ஸ் எவ்வித 'ரிஸ்க்' இல்லாமல் ரன் சேர்த்தனர். சதம் கடந்து அசத்தினர்,''என்றார்.
மேலும்
-
தமிழகத்தில் ஆலை அமைக்கும் உ.பி., நிறுவனம்
-
ரூ.175 கோடி திரட்டியது 'அசெட்பிளஸ்'
-
ஓசூரில் 'சிட்கோ' தொழிற்பேட்டை
-
ரூ.10,300 கோடியில் சென்னையில் உர ஆலை
-
ஜப்பானுக்கு ஆடை ஏற்றுமதி 31 சதவீதம் உயர்வு 7 மாதத்தில் ரூ.1,216 கோடிக்கு வர்த்தகம்
-
முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்கு உரிய மாநிலமாக உள்ளது தமிழகம் உலக பொருளாதார மன்ற அறிக்கையில் தகவல்