சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை: 'தெரியாது' என்றே சமாளித்த விஜய்
கரூர் துயர சம்பவம் தொடர்பாக, டில்லி சி.பி.ஐ., தலைமை அலு வலகத்தில், இரண்டாவது முறையாக விசாரணைக்கு ஆஜரான த.வெ.க., தலைவர் விஜய், பல கேள்விகளுக்கு, 'தெரியாது' என்றே பதிலளித்துள்ளார்.
கரூர், வேலுச்சாமிபுரத்தில், கடந்தாண்டு, த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டம் நடந்தது. அதில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக, டில்லியில் உள்ள சி.பி.ஐ., தலைமை அலுவலகத்தில், இரண்டாம் கட்ட விசாரணைக்காக விஜய் நேற்று ஆஜரானார். காலை 10:30 மணி முதல் மாலை 4:40 மணி வரை விசாரணை நடந்தது.
சி.பி.ஐ., அதிகாரிகள் கூறியதாவது: கரூர் துயர சம்பவத்தின் பின்னணியில் சதி இருப்பதாக கருதுகிறீர்களா என்ற கேள்விக்கு, சிலர் மீது சந்தேகம் இருப்பதாக விஜய் கூறியுள்ளார்.
பின், சந்தேகத்துக்குரிய நபர்கள் பெயரையும் குறிப்பிட்டுள்ளார். 'கூட்டத்துக்கு ஏன் தாமதமாக சென்றீர்கள்' என்ற கேள்விக்கு, 'குறிப்பிட்ட நேரத்துக்குள் அங்கு சென்று விட்டேன்' என தெரிவித்துள்ளார்.
'அப்படியென்றால், கரூருக்கு பகல் 12:00 மணிக்குள் வந்து விடுவீர்கள் என, உங்கள் கட்சியினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டது ஏன்?' என அதிகாரிகள் கேட்க, 'அது குறித்து எனக்கு தெரியாது' என விஜய் பதிலளித்துள்ளார்.
'நீங்கள் சென்ற வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. அதுபற்றியோ, கூட்டத்தை கட்டுப்படுத்த முறையான ஏற்பாடு செய்யப்படாதது குறித்தோ, போலீஸ் தரப்பில் உங்களுக்கு சொல்லப்பட்டதா?' என்ற கேள்விக்கு, 'தெரியாது' என பதில் அளித்துள்ளார் விஜய்.
'கூட்டத்தில் சிக்கி பரிதவித்தவர்களை மீட்காமல், அங்கிருந்து புறப்பட்டு சென்றது மனிதாபிமான செயலா?' என அதிகாரிகள் கேட்க, 'அசம்பாவிதம் ஏற்படலாம்; உடனே, கிளம்பிச் செல்லுங்கள் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
'அதை அடுத்தே, அங்கிருந்து புறப்பட்டேன்' என விஜய் பதில் அளித்துள்ளார். கேட்கப்பட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு, தனக்கு எதுவும் தெரியாது என விஜய் பதில் அளித்துள்ளதால், த.வெ.க., நிர்வாகிகளான ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், கரூர் மாவட்டச்செயலர் மதியழகன் உள்ளிட்டோரை மீண்டும் விசாரணைக்கு அழைக்க உள்ளோம்.
அதேபோல், விஜயின் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி, விஜயின் பாதுகாவலர் நயிம் மூசா, விஜயின் மேலாளர் ஜெகதீஷ் உள்ளிட்டோரையும் விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
விஜயிடம் விசாரணை நிறைவு பெற்ற நிலையில், த.வெ.க., இணை பொதுச்செயலர் நிர்மல்குமார் கூறுகையில், ''த.வெ.க., தலைவர் விஜயிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் நடத்திய விசாரணை நிறைவு பெற்றது. கரூர் சம்பவத்தில், எங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள் குறித்து, சி.பி.ஐ., அதிகாரிகளிடம் தெரிவித்து விட்டோம்,'' என்றார்.
- நமது நிருபர் -