அடுத்தடுத்து நிறைய, வரிசையாக திறப்பு விழாக்கள் காத்திருக்கிறது; முதல்வர் ஸ்டாலின் சஸ்பென்ஸ்

51


சென்னை: தலைநகர் சென்னைக்காக திமுக அரசு எத்தனையோ திட்டங்களை செய்து கொடுத்து இருக்கிறது. அடுத்தடுத்து நிறைய, வரிசையாக திறப்பு விழாக்கள் காத்திருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரைச் சாலை நெம்மேலியில் ரூ.342.6 கோடியில் அமையவிருக்கும் மாமல்லன் நீர்த்தேக்கத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் 1967ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் இருந்தபோது 43 அணைகள் கட்டப்பட்டுள்ளன.


பொதுவாகவே பலருக்கு உண்மை தெரிந்தும், சிலருக்கு உண்மை தெரியாமலும் திமுக ஆட்சியில் அணைகளே கட்டப்படவில்லை என்று பெரிய பொய்யை கூறுவார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் கருணாநிதி தமிழகத்தின் நீர்நிலைகளை காப்பதற்கு தேவையான அனைத்தையும் செய்திருக்கிறார்.

முக்கியம்



ஒரு நாட்டிற்கு நிதி மேலாண்மை போலவே, இப்பொழுது நீர் மேலாண்மையும் மிக மிக முக்கியம். அந்த நீர் மேலாண்மைக்கு மிக மிக அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் உணர்ந்து திமுக அரசு செயல்படுகிறது. நீர் நிலைகளை மாசுபடாமல் காத்து வருகிறோம். நிலத்தடி நீரை அதிகரிக்க எல்லா முயற்சிகளும் எடுத்து வருகிறோம்.

கடல்நீரை குடிநீர் ஆக்கவும் முயற்சி செய்கிறோம். அரசு என்ன தான் ஒரு பக்கம் நடவடிக்கை எடுத்தாலும், மக்களுக்கும் இதில் கடமை இருக்கிறது. அதனால் தான் சமூக பொறுப்புணர்வு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்கில் சிறப்பாக செயல்பட கூடியவர்களுக்கு விருதுகளை தொடர்ந்து வழங்கி கொண்டு இருக்கிறோம்.

மிகுந்த மகிழ்ச்சி



நீர்வளத்துறை பிற துறைகளுடன் ஒருங்கிணைந்து தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் இருக்க கூடிய கால்வாய்கள் மற்றும் நீர் நிலைகளை சுத்தப்படுத்தி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நீண்ட கால பலன்களை பெறக்கூடிய வகையில், நிலையான நீர் மேலாண்மைகளை உறுதி செய்யக்கூடிய அரசு தன்னார்வல தொண்டு நிறுவனங்களை பாராட்டி இன்றைக்கு விருது வழங்கியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.



தலைநகர் சென்னைக்காக திமுக அரசு எத்தனையோ திட்டங்களை செய்து கொடுத்து இருக்கிறது. அடுத்தடுத்து நிறைய, வரிசையாக திறப்பு விழாக்கள் காத்திருக்கிறது. இன்றைக்கு நான் தொடங்கிய நீர் தேக்க பணி மக்களுக்கு வாழ்வளிக்க போகிறது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Advertisement