கிரீன்லாந்தின் இறையாண்மையை நிலைநிறுத்துவோம்: டிரம்புக்கு ஐரோப்பிய ஆணைய தலைவர் பதில்

8

நமது நிருபர்




கிரீன்லாந்தின் இறையாண்மையை நிலைநிறுத்துவோம் என அதிபர் டிரம்புக்கு ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் பதில் அளித்துள்ளார்.


உலகின் மிகப் பெரிய தீவு நாடான கிரீன்லாந்து ஆர்டிக் பகுதியில் அமைந்துள்ளது. ஐரோப்பிய நாடான டென் மார்க்கின் ஒரு பகுதியாக இது இருந்தாலும், தன்னாட்சி அதிகாரம் பெற்றது. அதிக நிலப்பரப்பும் கனிம வளமும் கொண்ட கிரீன்லாந்தை, கையகப்படுத்த திட்டமிட்டு, அச்சுறுத்தும் தொனியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசி வருகிறார்.

இதற்கு, அமெரிக்காவின் நேட்டோ கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஐரோப்பிய நாடுகள் ஒட்டு மொத்தமாக எதிர்ப்பு தெரிவிக்கின்றன. கிரீன்லாந்தில் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன் ஐரோப்பிய நாடுகள், தங்கள் படைகளையும் அனுப்பி வைத்துள்ளன. இது, டிரம்புக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.



கிரீன்லாந்து விவகாரத்தில், அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார். ஆனால், தாங்கள் படைகளை அனுப்பியது, கிரீன்லாந்தின் பாதுகாப்பை பலப்படுத்தவே என்றும், அமெரிக்காவிற்கு எதிராக அனுப்பவில்லை என்றும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்தது. அமெரிக்கா உடன் போடப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது.


கிரீன்லாந்தின் இறையாண்மையை நிலைநிறுத்துவோம் என அதிபர் டிரம்புக்கு ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் சபதம் செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:


சமீபத்திய பதட்டங்கள் குறித்து விவாதிக்க நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், ஜெர்மன் அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் மற்றும் இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி ஆகியோருடன் பேசினேன்.


கிரீன்லாந்து மற்றும் டென்மார்க் நாட்டின் இறையாண்மையை நிலைநிறுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எங்கள் பொருளாதார மற்றும் பாதுகாப்பு நலன்களை நாங்கள் எப்போதும் பாதுகாப்போம்.


இந்த சவால்களை உறுதியுடன் எதிர்கொள்வோம். இவ்வாறு உர்சுலா வான் டெர் லேயன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Advertisement