கிரீன்லாந்து மீது டென்மார்க் நாட்டுக்கு என்ன உரிமை இருக்கிறது; கேட்கிறார் அதிபர் டிரம்ப்

27


வாஷிங்டன்: நோபல் பரிசு கிடைக்காததால் இனிமேல் முற்றிலும் அமைதியை பற்றி சிந்திக்க வேண்டிய அவசியமில்லை. கிரீன்லாந்து மீது டென்மார்க் நாட்டுக்கு என்ன உரிமை இருக்கிறது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஆசைப்பட்டு, நான் எட்டு போர்களை நிறுத்திவிட்டேன் என்று அதிபர் டிரம்ப் தம்பட்டம் அடித்தாலும், 2025ம் ஆண்டுக்கான பரிசு அவருக்கு வழங்கப்பட வில்லை. இருந்தாலும் அமைதிக்கான நோபல் பரிசு குறித்து டிரம்ப் தொடர்ந்து புலம்பி வருகிறார்.

இந்நிலையில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கும் நார்வே நாட்டு பிரதமர் ஜோனாஸ் காஹர் ஸ்டோரிடம் அதிபர் டிரம்ப் தனது அதிருப்தியை கொட்டி தீர்த்து இருக்கிறார். அவர் நார்வே பிரதமர் ஜோனாஸ் காஹர் ஸ்டோருக்கு அனுப்பிய செய்தியில் கூறியிருப்பதாவது:


8 போர்களை நிறுத்தியதற்காக உங்கள் நாடு எனக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்குவது பற்றி பரிசீலிக்கவில்லை என்பதால் முற்றிலும் அமைதியை பற்றி சிந்திக்க வேண்டிய கடமை எனக்கு இல்லை. அமெரிக்காவிற்கு எது நல்லது என்பது பற்றி சிந்தித்தால் போதுமானது என்று நினைக்கிறேன்.


கிரீன்லாந்தை ரஷ்யா, சீனாவிடம் இருந்து டென்மார்க்கால் பாதுகாக்க முடியாது. கிரீன்லாந்து மீது உரிமை கொண்டாட டென்மார்க் நாட்டிற்கு என்ன காரணம் இருக்கிறது? எழுதப்பட்ட ஆவணங்கள் எதுவும் கிடையாது. சில நூறு ஆண்டுக்கு முன், அங்கு ஒரு படகு கரை சேர்ந்தது என்பதை தவிர டென்மார்க் நாட்டுக்கு எந்த உரிமையும் கிடையாது. எங்களது படகுகளும் தான் அங்கு சென்று கொண்டு இருக்கின்றன.


நான் மற்றவர்களை காட்டிலும் நேட்டோ கூட்டமைப்புக்கு நிறைய செய்து இருக்கிறேன். இப்பொழுது நே ட்டோ அமெரிக்காவிற்கு பதிலுக்கு ஏதாவது செய்து ஆக வேண்டும். அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் கிரீன்லாந்து வராத வரை உலகம் பாதுகாப்பாக இருக்காது. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

Advertisement