காசா அமைதி வாரியத்தில் இணைய அமெரிக்கா அழைப்பு; ரஷ்யா அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மாஸ்கோ: காசா அமைதி ஒப்பந்தத்தில் இணையுமாறு ரஷ்ய அதிபர் புடினுக்கு, டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளதாக கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல், காசா போரை முடிவுக்கு கொண்டு வர புதிய முயற்சியாக அமைதி வாரியத்தை ஏற்படுத்த போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். அமைதி வாரியத்தின் தலைவராக பொறுப்பேற்று உள்ளதாகவும் அவர் அறிவித்துக் கொண்டார்.

காசாவில் நீடித்து நிலைக்கும் அமைதி வாரியத்தில் இணையுமாறு இந்தியாவுக்கு, டிரம்ப் கடிதம் எழுதி உள்ளார். இந் நிலையில், இந்த வாரியத்தில் இணைந்து கொள்ளவேண்டும் என்று ரஷ்யாவை அமெரிக்கா அழைத்துள்ளது. அமெரிக்காவின் இந்த அழைப்பை, ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி அறிவித்துள்ளது.

இது குறித்து கிரெம்ளின் மாளிகை வெளியிட்டு உள்ள அறிக்கை;

காசா அமைதி வாரியத்தில் சேருமாறு புடினை, டிரம்ப் அழைத்தார். தற்போது அந்த திட்டத்தின் அனைத்து விஷயங்களையும் நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். அதில் உள்ளவற்றை தெளிவுபடுத்த அமெரிக்காவை தொடர்பு கொள்வோம் என்று நம்புகிறோம்.

இவ்வாறு கிரெம்ளின் மாளிகை அறிக்கையில் கூறி உள்ளது.

முன்னதாக இந்த அமெரிக்காவின் முன்மொழிவை அந்நாட்டின் நெருங்கிய கூட்டாளியான ஹங்கேரி வெளிப்படையாக ஆதரித்துள்ளது. இதே போல, கஜகஸ்தானும் அமைதி வாரியத்தில் சேர ஒப்புக் கொண்டு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Advertisement