செனகல் அணி சாம்பியன்: ஆப்ரிக்க கோப்பை கால்பந்தில்

ரபாத்: ஆப்ரிக்க கோப்பை கால்பந்து தொடரில் செனகல் அணி சாம்பியன் பட்டம் வென்றது. பைனலில் 1-0 என, மொராக்கோவை வென்றது.

மொராக்கோவில், ஆப்ரிக்க கோப்பை கால்பந்து 35வது சீசன் நடந்தது. ரபாத் நகரில் நடந்த பைனலில் மொராக்கோ, செனகல் அணிகள் மோதின. முதல் பாதி கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது.

'பெனால்டி' சர்ச்சை: இரண்டாவது பாதியின் 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் (90+2வது நிமிடம்) செனகல் வீரர் அடித்த கோல் மறுக்கப்பட்டது. பின், 90+8வது நிமிடத்தில் மொராக்கோ அணிக்கு 'வார்' தொழில்நுட்ப உதவியுடன் 'பெனால்டி' வாய்ப்பு வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த செனகல் வீரர்கள், நடுவருடன் வாக்குவாதம் செய்தனர். பின், 90+12வது நிமிடத்தில் மைதானத்தை விட்டு வெளியேறினர். ஆத்திரமடைந்த செனகல் ரசிகர்கள் சிலர், மைதானத்திற்குள் நுழைய முயற்சித்தனர். அவர்களை போலீசார் தடுத்தனர். சிறிது நேரத்திற்கு பின், செனகல் வீரர்கள் மீண்டும் மைதானத்திற்குள் வந்தனர்.


வாய்ப்பு வீண்: 14 நிமிடங்களுக்கு பின், மீண்டும் போட்டி நடத்தப்பட்டது. 'பெனால்டி' வாய்ப்பில் மொராக்கோ வீரர் பிராஹிம் டயஸ் அடித்த பந்தை செனகல் கோல்கீப்பர் எடுவார்ட் மெண்டி சாமர்த்தியமாக தடுத்தார். ஆட்டநேர முடிவில் போட்டி 0-0 என, மீண்டும் சமநிலை வகித்தது.
இதனையடுத்து போட்டியின் முடிவு கூடுதல் நேரத்திற்கு சென்றது. இதில் 94வது நிமிடத்தில் செனகல் வீரர் பேப் குயே ஒரு கோல் அடித்தார். இதற்கு, மொராக்கோ அணியினரால் பதிலடி கொடுக்க முடியவில்லை.
முடிவில் செனகல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் 2வது முறையாக (2021, 2026) கோப்பை வென்றது.

Advertisement