ஜோகோவிச் '100': ஆஸ்திரேலிய ஓபனில் கலக்கல்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் அரங்கில், ஜோகோவிச் தனது 100வது வெற்றியை பதிவு செய்தார்.

மெல்போர்னில், ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயினின் பெட்ரோ மார்டினஸ் மோதினர். ஜோகோவிச் 6-3, 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இது, ஆஸ்திரேலிய ஓபனில் கோகோவிச் பெற்ற 100வது வெற்றி. இதுவரை இங்கு விளையாடிய 110 போட்டியில், 100 வெற்றி, 10 தோல்வியை சந்த்துள்ளார்.

மற்றொரு முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் 6-2, 6-2, 6-3 என, அமெரிக்காவின் மெக்கென்சி மெக்டொனால்டை வீழ்த்தினார். சுவிட்சர்லாந்தின் வாவ்ரின்கா 5-7, 6-3, 6-4, 7-6 என செர்பியாவின் லாஸ்லோ ஜெரேவை தோற்கடித்தார்.
மற்ற முதல் சுற்று போட்டிகளில் ரஷ்யாவின் டேனில் மெட்வெடேவ், நார்வேயின் காஸ்பர் ரூட், கனடாவின் டெனிஸ் ஷபோவாலோவ் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.


ஸ்வியாடெக் வெற்றி: பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் போலந்தின் ஸ்வியாடெக், சீனாவின் யூ யுவான் மோதினர். இதில் ஸ்வியாடெக் 7-6, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு முதல் சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப் 6-2, 6-3 என உஸ்பெகிஸ்தானின் கமில்லா ராஹிமோவாவை வென்றார்.
மற்ற முதல் சுற்று போட்டிகளில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, அமண்டா அனிசிமோவா, பெல்ஜியத்தின் எல்லிஸ் மெர்டென்ஸ், ஸ்பெயினின் பவுலா படோசா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

Advertisement