பெண்களிடம் அத்துமீறிய டி.ஜி.பி., : 'வீடியோ' வெளியானதால் பரபரப்பு

4

பெங்களூரு : பெங்களூரில் தங்கம் கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள, கன்னட நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தையான போலீஸ் டி.ஜி.பி., ராமச்சந்திர ராவ், பணி நேரத்தில் போலீஸ் சீருடையில் பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளும் 'வீடியோ' வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தங்கம் கடத்தல் வழக்கில் கைதாகி, சிறையில் உள்ள நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தை ராமச்சந்திர ராவ். கர்நாடகாவின் சிவில் உரிமைகள் அமலாக்க இயக்குநரக டி.ஜி.பி.,யாக உள்ளார். இவர், தன் அலுவலகத்தில் போலீஸ் சீருடையில், பல பெண்களுடன் அநாகரிகமாக நடந்து கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.தனித்தனியாக எடுக்கப்பட்ட மூன்று வீடியோக்கள் எடிட் செய்யப்பட்டு, பின்னணி பாடல்கள் வைக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் வெளியாகின. இது, மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முதல்வர் கோபம்



சித்தராமையா கூறுகையில், "இந்த விஷயம், காலையில் என் கவனத்திற்கு வந்தது; விசாரணை நடத்தப்படும். தவறு நடந்தது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும், சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல," என்றார்.


அதே சமயம், "இந்த விஷயம் குறித்து எதுவும் தெரியாது. முதல்வர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் கேள்வி கேளுங்கள். என்னிடம் கேட்காதீர்கள்," என, துணை முதல்வர் சிவகுமார் மழுப்பலாக பதில் அளித்தார்.


இதையடுத்து, நிலைமை கட்டுக்கடங்காமல் போவதை அறிந்த, டி.ஜி.பி., ராமச்சந்திர ராவ், வீடியோ குறித்து தன் னிலை விளக்கம் அளிப்பதற்காக பெங்களூரு சதாசிவ நகரில் உள்ள உள்துறை அமைச்சர் பரமேஸ்வரின் வீட்டுக்கு சென்றார். ஆனால், பரமேஸ்வர் அவரை பார்க்க விருப்பமில்லை என்று கூறி விட்டதாக தெரிகிறது.

களங்கம்



அதன்பின், பரமேஸ்வரின் வீட்டுக்கு வெளியே ராமச்சந்திர ராவ் அளித்த பேட்டி: இந்த வீடியோக்கள் ஏ.ஐ., எனப்படும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பட்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டு உள்ளன. என் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த, யாரோ சிலர் வேண்டுமென்றே வீடியோவை வெளியிட்டு உள்ளனர்.என் வக்கீலுடன் ஆலோசித்த பின், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


இந்நிலையில், மாலை, அடையாளம் தெரியாத பெண் ஒருவருடன் ராமச்சந்திர ராவ் போனில் உரையாடும் ஆடியோ சமூக வலைத்ளங்களில் வெளியானது.ஆடியோவில், ராமச் சந்திர ராவ் ஆபாசமாக பெண்ணிடம் பேசுகிறார். இதையும், அவர் மறுப்பாரா என்ற கேள்வி எழுந்து உள்ளது.

Advertisement