உப்பனாறு மேம்பால திட்டத்தால் பொதுமக்கள் கடும் அதிருப்தி:18 ஆண்டுகளாக ஜவ்வாக இழுக்குது
புதுச்சேரி: அரசியல் அழுத்தங்களுக்கு பயந்து உப்பனாறு பாலம் கட்டும் பணியை ஜவ்வாக இழுத்து கொண்டு இருப்பதுகடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் மோசமான உட்கட்டமைப்பு பட்டியலில் எப்போதும் உப்பனாறு மேம்பாலத்திற்கு தான் முதலிடம் உண்டு. ஒரு மாதத்திற்குள் மேம்பாலம் கட்டும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ள சூழ்நிலையில், தம்மாதுண்டு பாலம் கடந்த 18 ஆண்டுகளாக ஜவ்வாக இழுத்து கட்டப்பட்டு வருகிறது. பல கோடிகள் செலவிட்டும் கூட பில்லர்களை கூட முழுதுமாக எழுப்பப்படவில்லை.
என்.ஆர்.காங்., பா.ஜ., ஆட்சியிலும் பல முயற்சிக்கு பின் கடந்தாண்டு உப்பனாறு மேம்பாலத்தை ரூ.29.25 கோடியில் எழுப்ப பிள்ளையார் சுழி போடப்பட்டது. அதற்கு ஏற்ப வரிசையாக கட்டுமான பொருட்கள் வந்து இறங்க எல்லாமே சரியாக நடந்து விமோசனம் பிறக்கும் என, நினைத்த வேளையில், இப்போது எல்லாமே தலைகீழாக மாறியுள்ளது. போடப்பட்ட இரண்டு பில்லர்களை வடக்கு - தெற்காக தற்போது இடித்து புது பிளானை போட்டு வருகின்றனர்.
அப்படியென்றால், ஏற்கனவே போடப்பட்ட பிளான் என்ன ஆயிற்று. அதனை இன்ஜினியர் தானே போட்டார்கள். எதற்காக அந்த பில்லர்கள் இடிக்கப்படுகின்றன. இப்படியே ஒவ்வொரு பில்லர்களை இடித்து இவர்கள் எப்போது மேம்பாலம் கட்டுவார்கள். மீண்டும் முதலில் இருந்தா... என மக்களும் கடும் அதிருப்தியில் கேள்வியை எழுப்பி வருகின்றனர்.
இது 2008.... புதுச்சேரியின் நகரப் பகுதியான மறைமலை அடிகள் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், மறைமலை அடிகள் சாலையில் இருந்து காமராஜர் சாலையை இணைப்பதற்காக உப்பனாறு வாய்க்காலில் 732 மீட்டர் தொலைவுக்கு இருபுறமும் நடைபாதையுடன் கூடிய மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2008ம் ஆண்டு துவங்கியது.
இப்பணியை தொடங்கிய தனியார் நிறுவனம் ரூ.3.5 கோடியில் மேம்பாலத்துக்கான பவுண்டேஷன் அமைத்ததுடன் பணியை பாதியில் நிறுத்தி விட்டது.
இது 2014... இதன் பின், உப்பனாறு வாய்க்கால் பாலம் அமைக்கும் பணி பாதியில் விடப்பட்டது. தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு பிறகு 2014ம் ஆண்டு மீண்டும் மேம்பாலம் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டது. இதற்காக, ஹட்கோ வங்கியில் ரூ. 37 கோடியும், புதுச்சேரி அரசு ரூ 7.5 கோடியும் சேர்த்து மொத்தம் ரூ.44.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், உப்பனாறில் பாலம் அமைக்கப்படுவதால் அதில் உள்ள நீர் உருளையன்பேட்டை தொகுதிக்குள் புகுவதாக அந்தப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன.
இது 2025ம் ஆண்டும்... அதன் பிறகு பொதுப்பணித் துறை மூலம் ரூ.29.25 கோடியில் 3வது முறையாக உப்பனாறு வாய்க்காலில் உள்ள மேம்பாலத்தின் மீதமுள்ள பணிகளை முடிப்பதற்கும், பாலாஜி திரையரங்கம் அருகே உள்ள பழைய பாலத்தை மறுசீரமைப்பு செய்வதற்கான பணிகளை கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கடந்தாண்டு மார்ச் மாதம் துவக்கி வைத்தனர்.
ஆனாலும் இப்போது பிளானே புதுசாக போட்டு திட்டத்தை மேலும் ஜவ்வாக இழுக்கும் பணியை அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர். இந்த திட்டத்திற்கு முன் ஆரம்பிக்கப்பட்ட நுாறடி ரோடு ரயில்வே மேம்பாலம், அரும்பார்த்தபுரம் ரயிவே மேம்பாலம் எழுந்து மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டு விட்டது. அடுத்த கடலுார் ரயில்வே மேம்பாலமும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவும் அடுத்த ஆண்டிற்கு தயாராகி விடும்.
ஆனால் உப்பனாறு மேம்பாலம் சகதிகளில் சகதியாக உள்ளே மூழ்கி கிடக்கிறது. அரசியல் அழுத்தம், டெண்டர் எடுத்தவர்கள் ஓட்டம் என, இப்படியே காலத்தை ஓட்டிக்கொண்டு இருந்தால், புதுச்சேரி உட்கட்டமைப்பு வரலாற்றில் இத்திட்டம் மோசமான வரலாற்றை படைக்கும்.
@block_B@
உப்பனாறு மறைமலை அடிகள் சாலையில் இருந்து 50 மீட்டரும், காமராஜர் சாலையில் இருந்து 50 மீட்டரும் என உப்பனாறு பாலத்துடன் சாலைகளை இணைக்கும் பணியும், பாலத்தின் இரு புறமும் 732 மீட்டர் தொலைவுக்கு தடுப்புச் சுவர் அமைக்கும் பணியும் கட்ட வேண்டும். ஆனால் இந்த பாலப் பணிகளால் குடியிருப்பு பகுதிகளுக்குள் கழிவுநீர் சென்று பணிகள் பாதியில் நிறுத்தப்படுகிறது. வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு, குடியிருப்பு பகுதிகளுக்கு கழிவு நீர் செல்வதை தடுக்க பெரிய அளவிலான குழாய்கள் அமைக்கப்பட்டன. அதிலும் தீர்வு காணப்படவில்லை. வீடுகளுக்குள் கழிவு நீர் புகாதாவறு திட்டத்தினை முன் கூட்டியே திட்டமிட்டிருந்தால் அரசுக்கு பல கோடி ரூபாய் மிச்சமாகி இருக்கும். போக்குவரத்து நெரிசல் குறையும் புதுச்சேரி போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது.
வார இறுதிநாட்களில் அதிகளவு வெளிமாநில சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வருகின்றனர். அந்த நாட்களில் புதுவை நகரப் பகுதியில் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக பிரதான சாலைகளான காமராஜர் சாலை, மறைமலை அடிகள் சாலையில் வணிக நிறுவனங்கள், தியேட்டர்கள் இருப்பதால் கூடுதலாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. உப்பனாறு பாலம் கட்டும் பணி முடிந்தால் காமராஜர் சாலை - மறைமலைஅடிகள் சாலை இணைக்கப்பட்டு நெரிசல் சிறிது குறையும்.block_B
மேலும்
-
2வது டி - 20 கிரிக்கெட்: இந்தியா பவுலிங்
-
டபுள் எஞ்சின் எனும் டப்பா எஞ்சின் தமிழகத்தில் ஓடாது!: முதல்வர் ஸ்டாலின்
-
தே.ஜ., கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமருடன் மேடையேறிய தலைவர்கள்! இதோ முழு பட்டியல்
-
மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் மோடி விளாசல்: தமிழ் கலாசாரத்தின் எதிரி திமுக என தாக்கு
-
சுதந்திரச் சுடர்: மாவீரன் நேதாஜி
-
கரப்ஷன், மாபியா, கிரைம் மிகுந்த திமுக ஆட்சி; பிரதமர் மோடி காட்டம்